சென்னை:அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 5-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியினை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த தொடரில் அகமதாபாத் எஸ்.ஜி.பைப்பர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ், பெங்களூரு ஸ்மேஷர்ஸ், புனேரி பல்தான் டிடி, யு மும்பா டிடி என மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றுள்ளன. இதில் ஒரு அணி தனது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை பலப்பரீட்சை நடத்தும்.
அந்த வகையில் ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடும். லீக் சுற்றில் மொத்தம் 20 ஆட்டங்கள் இடம்பெறும். இந்த தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் 2 ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்கள், 2 மகளிர் ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் 1 கலப்பு இரட்டையர் ஆட்டம் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடத்தப்படும். இதன் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.