சென்னை:இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் பங்குபெறும் டென்னிஸ் கிளப்களுக்கு இடையிலான நாக் அவுட் சாம்பியன்ஷிப் போட்டி முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முதல் முறையாக "RWD ஓபன் சென்னை சிட்டி கிளப் லீக் நாக்அவுட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2024" போட்டி நடத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவைச் சார்ந்த டென்னிஸ் போட்டியின் முன்னணி வீரர்களான சோம்தேவ் தேவ் வர்மன், விஜயலட்சுமி மற்றும் மாநில முன்னணி வீரர்கள் பங்குபெறும் கிளப்களுக்கு இடையேயான டென்னிஸ் போட்டி 45 நாட்கள் நடைபெறும் என்றும், இதில் 5 இரட்டையர்கள் பிரிவுகள் உள்ளடக்கிய 30 வயதுக்கு மேற்பட்டோர், 35 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர், 55 வயதுக்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த போட்டி நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் கௌரவ செயலாளர் பிரேம்குமார் கூறியதாவது, “எந்த விளையாட்டுக்கும் வயது ஒரு தடை கிடையாது எனவும், எல்லா கிளப்களிலும் சிறுவர்கள் விளையாடுவதில்லை எனவும், வயதானவர்கள் தான் விளையாடி வருவதாக தெரிவித்தார். இந்த விளையாட்டில் கிளப் அளவில் எல்லோரும் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் 45 நாட்கள் இந்த தொடர் நடைபெறுவதாக தெரிவித்தார். இந்த போட்டிக்காக மட்டும் மொத்தம் ஆர்எம்டி நிறுவனம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பரிசுத் தொகைக்காக ரூபாய் 2 இரண்டு லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.