பிரிஸ்பேன்:ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஒரு டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பாவில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜோஷ்வா டி சில்வா 79 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 289 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், கீமர் ரோச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 22 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட், லயான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முடிவில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி வீழ்ந்தது. ஸ்டீவ் ஸ்மித் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷமார் ஜோசப்புக்கு வழங்கப்பட்டது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி சமன் செய்தது. 1997ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை அதன் செந்த மண்ணில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன் பிறகு ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்து உள்ளது.
இதையும் படிங்க:ஆஸ்திரேலிய ஓபன்: 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டி தூக்கிய ரோஹன் போபண்ணா!