ஐதராபாத்:இந்திய அணியி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் திணறி வருகிறார். காயம் காரணமாக தொடர்ந்து அவதியுற்று வரும் முகமது ஷமி உடற்தகுதியை எட்ட போராடி வருகிறார்.
இந்நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் முகமது ஷமி இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக உடற்தகுதி எட்டும்படி பிசிசிஐ கடும் நிபந்தனைகளை முகமது ஷமிக்கு விதித்ததாக சொல்லப்படுகிறது.
சிறு காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள முகமது ஷமியை பிசிசிஐ மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ரஞ்சிக் கோப்பையில் பெங்கால் அணிக்காக விளையாடிய முகமது ஷமி களமிறங்கிய முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து அவர் சையது முஷ்டாக் அலி டிராபியில் விளையாடுகிறார்.
இந்நிலையில், மருத்துவக் கண்காணிப்பு குழு சார்பில் முகமது ஷமியிடம் உடல் எடையை குறைத்து, உடற்தகுதி எட்டும் படி அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மருத்துவக் குழு அறிவுரையை தொடர்ந்து முகமது ஷமி உடல் எடையை குறைத்து வருவதாகவும், அவரை தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர் நிஷாந்த் உள்ளிட்டோர் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் அவர் உடற்தகுதி எட்டாத நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. முகமது ஷமி இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி பெர்த் டெஸ்ட்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா 8 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 5 விக்கெட்டும், ஹர்சித் ரானா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க:சர்வதேச சிலம்பப் போட்டியில் தமிழக அணி சாம்பியன்! நாடு திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு!