ராவல்பிண்டி:வங்கதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷான்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக சவுத் சகீல் 141 ரன்களும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 171 ரன்களும் எடுத்தனர். தொடக்க வீரர் சயிம் அயுப் 56 ரன்கள் குவித்தார். வங்கதேச அணியின் ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மகுமுத் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மெகிதி ஹசன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேசம் அணி 167. 3 ஓவர்கள் முடிவில் 565 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. வங்கதேச வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.