ஐதராபாத்: பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். வேலைப்பளுவை கையாளவும் அணிக்கு ஒரு வீரராக கூடுதல் பங்களிப்பு வழங்கும் நோக்கிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து பாபர் அசாம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 10 வரிசையில் வரிசையில் இருந்த பாபர் அசாம் அண்மைக் காலமாக தொடர் சொதப்பல்கள் காரணமாக இறங்கு முகத்தை எதிர்கொண்டார்.
பாகிஸ்தானின் வீழ்ச்சி வரலாறு:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதை அடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார். தொடர்ந்து ஷாகீன் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாபர் அசாம் மீண்டும் பாகிஸ்தான் ஒருநாள் மட்டும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர், அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் என பாகிஸ்தான் அணி தொடர்ந்து சொதப்பி வந்தது.