ஐதராபாத்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கு பின்னர் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி மோசமான தோல்வியை எதிர்கொண்டது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
அடிலெய்டில் நடைபெறும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் - இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் பெரிய மாற்றமாக டாஸ்மேனியாவை சேர்ந்த முதல் தர கிரிக்கெட் வீரர் பியூ வெப்ஸ்டர் (Beau Webster) அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். பெர்த்தில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக பியூ வெப்ஸ்டர் அணியில் சேர்க்கப்பட்டடு உள்ளதாக கூறப்படுகிறது.