ஐதராபாத்:6வது டாடா ஸ்டீல் இந்தியா செஸ் சாம்பியன்ஷிப் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்றது. ரேபிட் மற்றும் பிளிட்ஸ் என இரண்டு பிரிவுகளில் இந்த சர்வதேச செஸ் போட்டி கொல்கத்தாவில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் கலந்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி உள்பட 10 வீரர்களும், பெண்கள் பிரிவில் 5 இந்திய வீராங்கனைகள் உள்பட 10 பேரும் பங்கேற்றனர். இதில் ரேபிட் செஸ் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் 9 சுற்றுகளை கொண்ட ரேபிட் செஸ் பிரிவில் மாக்னஸ் கார்ல்சன் 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இந்தியாவின் நட்சத்திர வீரா் அா்ஜுன் எரிகைசியுடன் மோதிய ஆட்டத்தில் 20வது காய் நகா்த்தலின் போது மாக்னஸ் காா்ல்சன் தோல்வியை தழுவினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கடைசி சுற்று ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தியை எதிர்த்து விளையாடிய மாக்னஸ் கார்ல்சன் அந்த ஆட்டத்தில் டிரா செய்தார்.
இதைஒடுத்து புள்ளிகள் அடிப்படையில் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மற்றபடி தமிழக வீரா் பிரக்ஞானந்தா 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளாா். முதல் 3 சுற்றுகளில் தோல்வியை தழுவினாலும், அடுத்தடுத்து தொடா்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா அசத்தினார்.
மற்ற வீரர்கள் அர்ஜூன் எரிகைசி, ரஷியாவின் டேனில் டுபோவ் 5.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். மகளிர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை கேத்ரீன் லேக்னோ சாம்பியன் பட்டம் வென்றார். தரவரசையில் 7 புள்ளிகளுடன் கேத்ரீன் முதலிடத்தை பிடித்தார். அவரைத் தொடர்ந்து வலேன்டினா குனியா 6 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ரேபிட் சாம்பியன் அலெக்சான்ட்ரா 5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
வெற்றியை தொடர்ந்து பேசிய மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின், கொல்கத்தாவிற்கு வந்து செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டதற்கு, இந்த ஊர் உணவும் ஒரு காரணம் எனத் தெரிவித்தார். இந்திய உணவு வகைகளின் மீது அலாதி பிரியம் கொண்டு இருப்பதாக கூறினார். மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வீரர்கள் தங்களை செஸ் மாஸ்டர்களாக முன்னிறுத்தி வருவதாகவும் அதை தான் வரவேற்பதாகவும் மாக்னஸ் கார்ல்சன் கூறினார்.
இதையும் படிங்க:சாம்பியன்ஸ் கோப்பை தொடரை சீர்குழைக்க திட்டமா? இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? பரவும் அதிர்ச்சி தகவல்!