ஐதராபாத்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தக்கவைப்பு வீரர்கள் பட்டியல்:
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மொத்தம் உள்ள 10 ஐபிஎல் அணிகளும் தங்களது அணிகளில் தக்கவைக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. தொடர்ந்து 250க்கும் மேற்பட்ட வீரர்கள் அணிகளுக்கு தேவைப்படும் நிலையில், அவர்கள் ஏலம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போகக் கூடிய வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்கள் ராபின் உத்தப்பா மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் கணிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி, பஞ்சாப் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட சாம் கரண் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வரும் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போவார் என எதிர்பார்க்கப்படுவதாக இருவரும் தெரிவித்தனர்.
சென்னை அணிக்கு திரும்பும் சாம் கரண்?:
சாம் கரண் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பலாம் அல்லது ஆர்டிஎம் விதியின் மூலம் அவரை பஞ்சாப் அணி தக்கவைக்கப்படலாம் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் சாம் கரண் மீது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் ஒரு கண் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பந்து வீச்சாளர்களில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்த முறை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படலாம் என ராபின் உத்தப்பா கணித்துள்ளார். கடந்த சீசனில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்ற வாஷிங்டன் சுந்தரை அணி நிர்வாகம் திறம்பட பயன்படுத்தாத நிலையில், நியூசிலாந்து தொடரின் மூலம் அவர் தன்னை மீண்டும் நிரூபிடித்துள்ளார். இதனால் வாஷிங்டன் சுந்தர் இந்த முறை கோடிக்கணக்கில் ஏலம் போகலாம் என உத்தப்பா கணித்துள்ளார்.
தமிழக வீரர் அஸ்வினுக்கு நல்ல வாய்ப்பு:
அதேபோல் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகலாம் என ராபின் உத்தப்பா மற்றும் ஆகாஷ் சோப்ரா கணிப்பு தெரிவித்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில், ஆடம் ஜம்பா, வனிந்து ஹசரங்கா, மற்றொரு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு தமிழக வீரர் சாய் கிஷோர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படலாம் என இருவரும் கூறியுள்ளனர். கடந்த சீசனில் குஜராத் அணிக்காக விளையாடிய அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நல்ல தொகைக்கு ஏலம் எடுக்க அதிக ஆர்வம் காட்டலாம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.
கவனம் ஈர்க்கும் நூர் அகமது:
அதேபோல் ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது மெகா ஏலத்தில் கவனிக்கத்தக்க வீரராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. யுஸ்வேந்திர சஹலுக்கு அடுத்தப்படியாக மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு கேட்கப்படும் சுழற்பந்து வீச்சாளராக நூர் அகமது இருப்பார் எனக் கருதப்படுகிறது.
ரஷீத் கான், முகமது நபி ஆகியோரை தொடர்ந்து இன்னொரு ஆப்கான் வீரர் நூர் அகமதுவுக்கு ஐபிஎல் ஏலத்தில் அதிக மவுசு இருக்கும் எனக் கருதப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை தக்கவைக்க தவறும் பட்சத்தில் குஜராத் அணி நூர் அகமதுவை ஆர்டிஎம் கார்டு மூலம் தக்கவைக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
அதிக தொகை போகும் வீரர் இவரா?:
நியூசிலாந்து டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் என அடுத்தடுத்து சிறப்பாக பந்து வீசி வரும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனக் கருதப்படுகிறது. பஞ்சாப் அணி அவரை ஆர்டிஎம் கார்டு மூலம் தக்கவைக்கலாம் என கருதப்படும் நிலையில், அப்படி இல்லாத பட்சத்தில் 10 முதல் 15 கோடி ரூபாய் வரை அவர் ஏலம் போகலாம் என உத்தப்பா கணித்துள்ளார்.
அதேநேரம் 18 கோடி ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரை ஏலம் போகலாம் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைப்பார் எனக் கருதப்படுகிறது. மற்றபடி டிரென்ட் பவுல்ட், ஹர்ஷல் படேல் உள்ளிட்டோரும் மெகா ஏலத்தில் கவனம் ஈர்க்கக் கூடிய வீரர்கள் என ராபின் உத்தப்பா மற்றும் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளனர்.
இதையும் படிங்க:"எதிர்காலத்துக்கும் உங்கள் அறிவை கொஞ்சம் சேமியுங்கள்"- முன்னாள் வீரருக்கு முகமது ஷமி பதிலடி!