பாரீஸ்:பாரீஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பெண்களுக்கான குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் சீன வீராங்கனை யாங் லியூ மற்றும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இமானே கெலிஃப் ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இமானே கெலிஃப், யாங் லியூவை 5 -0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அல்ஜீரியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த வெற்றியை அல்ஜீரிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாலின சர்ச்சை:முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றில் இத்தாலிய வீராங்கனை ஏஞ்ஜெலா காரினி, கெலிஃப்பை எதிர் கொண்டார். இதில் கெலிஃப்பின் அடியைத் தாக்க முடியாத ஏஞ்சலா, போட்டியிலிருந்து விலகுவதாக 45வது நெடியில் அறிவித்தார்.
மேலும் "கெலிஃப்பின் தாக்குதல் ஒரு பெண்ணை போன்றதாக இல்லை. அதனால்தான் நான் போட்டியில் இருந்து விலகுகிறோன் என ஏஞ்ஜெலா காரினி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து கெலிஃப்பின் பாலினம் குறித்து பல்வேறு நபர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதாவது இமானே கெலிஃப் பெண்ணாகப் பிறந்தாலும் மரபணு ரீதியாக அவர் ஆணாக இருக்கலாம் என அதரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மறுபுறம் கெலிஃப் ஆதரவாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். இந்த விவகாரம் உலகம் முழுவதும் பேசு பொருளான நிலையில் கெலிஃப்பிடம் மன்னிப்பு கோரினார் காரினி.
தன் மீது வைக்கப்பட்ட ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர்களுக்கு பதிலடி தரும் விதமாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தியுள்ள இமானே கெலிஃப். இது குறித்து அவர் கூறுகையில், "நான் ஒரு பெண்ணாகவே பிறந்து பெண்ணாகவே வாழ்ந்து வருபவள். இந்த வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது என் கனவு. இந்த வெற்றியை எதிரிகளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:அழகா பொறந்தது ஒரு குத்தமா? ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பராகுவே இளம் வீராங்கனை!