பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் நீர் சறுக்கு போட்டியில் கலந்து கொண்ட பிரேசில் வீரர் சாகசம் நிகழ்த்துவதை பிரபல பிரான்ஸ் செய்தி ஏஜென்சியான ஏஎஃப்பியின் புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆடவர் நீர் சறுக்கு விளையாட்டு Teahupo'o நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சாகசம் நிகழ்த்தினர். அதில் பிரேசிலை சேர்ந்த நீர் சறுக்கு வீரர் கேப்ரியல் மெதினா (Gabriel Medina) வானுயர்ந்த அலையின் மேலே ஒய்யாரமாக நீர் சறுக்கு செய்து சாகசம் நிகழ்த்தினார்.
வியந்து பார்க்கக் கூடிய வகையில் கேப்ரியல் மெதினா செய்த சாகசத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனமான ஏஎஃபியின் புகைப்பட கலைஞர் ஜெரோம் ப்ரூலெட் (Jerome Brouillet) படம் பிடித்தார். காண்பதற்கே வியப்பூட்டும் வகையில் புகைப்படம் அமைந்து இருந்தது. கற்பனைக்கு அப்பாற்றப்பட்டது போல் அவர் எடுத்த புகைப்படம் இருந்தது.