ஐதராபாத்:ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு நேற்று (அக்.3) திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ரஷித் கான் திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன.
ரஷித் கானின் திருமணம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டலில் நடந்தது. தனியார் ஹோட்டலில் நடந்த திருமண விருந்தில் வண்ண வண்ண வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டு இடமே விழாக் கோலம் பூண்டு காணப்பட்டது. ரஷித் கானின் திருமணத்தை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது நபி, ஒரேயொரு கிங் கான் ஆன ரஷித் கான் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துகள் என தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர். மேலும், திருமணம் நடந்த ஹோட்டலில் துப்பாக்கி ஏந்திய படி பலர் சுற்றித் திரிந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.