தூத்துக்குடி:தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயிலில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மேலும், முருகனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக பக்தர்களும் விரதம் இருந்து, பாதயாத்திரையாக முருகனின் அறுபடை வீடுகளை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், திருச்செந்தூர் முருகன் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
உலகத் தமிழர் போற்றிடும் தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் ஆன்மீக ஸ்தலங்களுள் மிகவும் புகழ்பெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதில் முருகப் பெருமான் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
திருச்செந்தூர் முருகன் கோயில் தைப்பூசம்:
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் நாளில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், விரதமிருந்து பாத யாத்திரையாக நடந்து வரும் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இந்த நிலையில், தைப்பூசத் திருவிழா இன்று (பிப்.11) நடைபெறுவதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
திருச்செந்தூர் கடற்கரையில் காத்திருக்கும் பக்தர்கள் (ETV Bharat Tamil Nadu) அதனைத் தொடர்ந்து, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட பூஜையும் பின்னர் மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றது. இன்று முருகனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக, அதிகாலை முதலே நீண்ட வரிசையில், பல மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயிலில் அடிப்படை வசதி:
இந்த நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக 24 மணி நேரமும் குழாய்கள் மூலம் ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீரானது, சுகாதாரமான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கழிவறை மற்றும் முதலுதவி சிகிச்சை மையத்துடன் கூடுதலாக இரண்டு மருத்துவ முகாம்கள் கோயில் வளாகப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில் தைப்பூச திருவிழா (ETV Bharat Tamil Nadu) பலத்த பாதுகாப்பு:
கடற்கரையில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பிற்காகக் கடல் பாதுகாப்பு குழுவினரும், மீட்புக் குழுவினரும் மும்முரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வளாகம், கடற்கரை பகுதி மற்றும் கோயிலுக்கு செல்லும் முக்கிய சாலை பகுதிகளிலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும் புன்னைநல்லூர்! கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் எடுத்து வந்த இஸ்லாமியர்கள்!
தைப்பூச திருவிழாவான இன்று முருகப் பெருமானைத் தரிசனம் செய்ய, நேற்றிலிருந்தே பக்தர்கள் ஆர்வமுடன் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அப்படி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி என இரு மார்க்கத்தின் வழியாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
அழகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தரிடம் ஒருவர் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu) அதிகப்படியான பக்தர்கள் தற்பொழுது திருச்செந்தூர் நோக்கி வருகை தந்துள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோயில் வளாகப் பகுதிகள் முழுவதிலும் 150-க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதனைக் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் பகுதியில் பக்தர்கள் கூட்டம் நிறைந்துள்ளதால், திருச்செந்தூர் முருகன் கோயில் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.