திண்டுக்கல்:நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு, இன்று (ஜன.21) காலை 400 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வந்து சேர்ந்தனர். 331 சர்க்கரை காவடியுடன், 76 ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் காவடிகள், கடந்த 16ஆம் தேதி தேவகோட்டை நகரப் பள்ளிக்கூடத்தில் காவடி கட்டி வைத்து பூஜை செய்த பின், அங்கிருந்து புறப்பட்டு, 19ஆம் தேதி குன்றக்குடியில் ஒன்றிணைந்து, 21 நாட்கள் பயணமாக புறப்பட்டு, இன்று (ஜன.21) காலை நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கு பானக பூஜை நடைபெற்றது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு, காவடிகள் நத்தம் மாரியம்மன் கோயில்தெரு, பெரியகடை வீதி, பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பாதைகளின் வழியாக பழனி நோக்கி தங்களது யாத்திரையைத் தொடங்கினர். அப்பொழுது வழி நெடுகிலும் பக்தர்கள், பொதுமக்கள் காவடியை வரவேற்று ஆசி பெற்றனர்.
தொடர்ந்து காவடி ஆட்டத்துடன் பழனியை நோக்கி பக்தர்கள் புறப்பட்டனர். சர்க்கரை காவடியுடன் புறப்பட்ட இந்த மக்கள், தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக, நத்தம் வழியாக பழனியை நோக்கி தங்களது பாதயாத்திரை பயணத்தை தொடர்கின்றனர். இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறும் தைப்பூசத்தின் போது பழனி சென்றடைந்து, அதன் பின் 28ஆம் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடி செலுத்தி, வழிபாடுகளை நிறைவு செய்ய உள்ளனர்.