திருநெல்வேலி:தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 244வது தோத்திர பண்டிகை விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மாம்பழ சங்க பண்டிகை இன்று (புதன்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லையில் நடைபெற்ற மாம்பழ சங்க விழா (Credits - ETV Bharat Tamil Nadu) குரங்கணி கோயிலுக்குச் சென்ற மக்களுக்காக கொண்டாட ஆரம்பிக்கப்பட்ட இந்த திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் காலை முதல் சிறப்புப் பிரார்த்தனைகளுடன் நடந்தது. இதில் இங்கிலாந்து சபையைச் சேர்ந்த ஆனந்த் ஆசிர் தேவ செய்தி அளிக்க, திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் பங்கு கொண்டதுடன், நூற்றாண்டு மண்டபம் முன்பு குவிந்திருந்த ஏழை எளியவர்களுக்கு அரிசி மற்றும் காணிக்கைகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, நாளை பாளையங்கோட்டை கதிட்ரல் பேராலயத்தில் 244வது தோத்திர பண்டிகை ஆராதனை நடைபெறுகிறது.
மாம்பழ சங்கம் என்றால் என்ன?முன்னொரு காலத்தில் நெல்லையைச் சேர்ந்த மக்கள் தூத்துக்குடியில் உள்ள குரங்கனி அம்மன் கோயிலுக்கு மாட்டு வண்டியில் குடும்பத்தோடு செல்வார்கள். பின்னாளில் அவர்களில் பலர் கிறிஸ்தவ மதம் மாறியதாகவும், அவர்களுக்காகவே மாம்பழ சங்கம் என்ற பெயரில் தென்னிந்திய திருச்சபை திருமண்டலம் சார்பில் திருவிழா நடத்துவதாகவும் கூறப்படுகிறது. இதில் யாசகர்களுக்கு உதவி செய்வது தான் விழாவின் முக்கிய அம்சமாகும்.
இது குறித்து விழாவில் பங்கேற்றவர்கள் குளோரிந்தா கூறுகையில், “இந்த பண்டிகையை எங்கள் முன்னோர் காலத்திலிருந்து கொண்டாடி வருகிறோம். குரங்கனி அம்மன் கோயிலுக்குச் சென்று கொண்டு இருந்த மக்களுக்காக இந்த 'மாம்பழ சங்கம்' விழாவைக் கொண்டாடி வருகிறோம்.
இந்த பண்டிகையில் கலந்து கொள்வதற்காக வரும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், யாசகர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்வார்கள். அதாவது அரிசி காணிக்கையாகவும், பணமாகவும் அல்லது உணவாகவும் அவரவர் வசதிக்கு ஏற்றார் போல் உதவிகளைச் செய்வர். அதேபோல் குழந்தை பாக்கியம், திருமண காரியங்களுக்காகவும் இங்கு வேண்டிக் கொள்வார்கள். மேலும், இங்கு நடைபெறும் விழாவைக் காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் வருவார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 5 தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி.. 6 மாவட்டங்களில் தொடங்குவதில் சிக்கல்!