தஞ்சாவூர்: கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசி மகா மகம் உலக பிரசித்தி பெற்றது. கடந்த 2016ஆம் மகா மகம் நடைபெற்றநிலையில், அடுத்து மகாமகம் வருகிற 2028ஆம் ஆண்டு நடைபெறும். மேலும், ஆண்டுதோறும் மாசி மாதம், மக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தில், மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
மாசி மகம் கும்பகோணத்தில் உள்ள 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ தலங்களில் இணைந்து நடைபெறும் விழாவாகும். அந்த வகையில், இந்த ஆண்டு மாசி மக உற்சவம், சைவ தலங்கள் ஐந்தில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியும், வைணவ தலங்கள் மூன்றில் பிப்ரவரி 16ஆம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாசிமக பெருவிழா கொடியேற்றம் நடைபெற்ற ஐந்து சைவ திருத்தலங்களிலும் 7ஆம் நாளான நேற்று இரவு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக, மகாமக திருக்குளத்தின் கிழக்கு கரையில் அமைந்துள்ள, அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வர கோயிலில், உற்சவர் சுவாமிகள் கோயில் ராஜகோபுரம் முன்பு எழுந்தருள, நாதஸ்வரம், மேள தாளம், மங்கல வாத்தியங்கள் முழங்க, மாலை மாற்றும் வைபம் மற்றும் ஊஞ்சலில் வைத்து நலங்கு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.