திருச்சிராப்பள்ளி:திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வருடந்தோறும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில், மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நேற்று (டிசம்பர் 13) மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
தென் கைலாயம் என்றழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தித் துணிகளைக் கொண்டு செய்யப்பட்ட திரியில் 900 லிட்டர் இலுப்பை எண்ணை, நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருச்சி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட காட்சி (ETV Bharat Tamil Nadu) அதற்காக மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி சன்னதியில் மெகா சைஸ் திரி தயாரிக்கும் பணி கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பின்னர், உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்புள்ள கார்த்திகை தீப கொப்பரையில் வைக்கப்பட்ட திரியில், 900 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஊறவைத்து நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.
இதையும் படிங்க:திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருநாள்: பரணி தீபம் ஏற்றி பக்தி முழக்கமிட்ட பக்தர்கள்!
இதனை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பல்வேறு வீடுகளின் மாடியிலும், மலைக்கோட்டை பகுதி வீதிகளிலும் நின்று திரளான பக்தர்கள், தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாய என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டவாறு வழிபாடு செய்து வணங்கிச் சென்றனர். மகா தீபம் ஏற்றப்படும் போது சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள் ஓதுவார்கள், இந்து சமய அறநிலையத் துறையினர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி (ETV Bharat Tamil Nadu) தற்போது, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்டுள்ள இந்த மகா தீபம், 3 நாட்கள் தொடர்ந்து இரவும், பகலும் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை மலைக்கோட்டையைச் சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க முடியும் என்கின்றனர்.
திருச்சி மலை உச்சியில் மகா தீபம் (ETV Bharat Tamil Nadu) இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறநிலையத் துறையினர் மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொண்டிருந்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை மலைக்கோட்டை திருக்கோயில் உதவி ஆணையர் அனிதா மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.