தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

"அரோகரா" கோஷத்துடன் முருகன் கோயில்களில் களைகட்டிய கந்த சஷ்டி சூரசம்ஹார விழா! - KANDA SASHTI FESTIVAL 2024

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, மருதமலை மற்றும் பச்சைமலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

Kanda Sashti Festival 2024
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 11:04 PM IST

தூத்துக்குடி: தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இந்த மாதம் 02ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி, நாளை (நவ.08) வரை நடைபெறுகிறது.

மேலும், 02ஆம் தேதி முதல் கந்த சஷ்டி விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர் சண்முகருக்கு உச்சிகால பூஜை, யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரிவீதி உலா ஆகியவை நடைபெற்றது.

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு (Credit - ETV Bharat Tamil Nadu)

இதன் தொடர்ச்சியாக, கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று (நவ.07) திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்களின் கூட்டத்தில், அரோகரா கோசத்திற்கு மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு ஹோமம் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

மேலும், தங்க சப்பரத்தில் ஸ்ரீஜெயந்திநாதா் திருவாவடுதுறை ஆதின மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சூரசம்ஹாரத்திற்கு வேல் வாங்கும் வைபவம் நடைபெற்றது. பின்னர் வீரவாள் மற்றும் புனித வேல் ஆகியவற்றுடன் ஜெயந்திநாதா் கடற்கரையில் எழுந்தருளினார்.

அதன் தொடர்ச்சியாக, சம்ஹாரத்தில் யானை தலை (கஜமுகாசுரன்), சிங்கத் தலை (சிங்கமுகாசூரன்) என சூரன் ஒவ்வொரு தலையாக இழக்கும் நிகழ்வும், மரமாக மாறி போர்புரிய வந்த சூரபதுமனை முருகன் தன் வேலினால் இருகூறாக்கி ஆணவம் அழிந்த சூரனை மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் முருகன் அருள்புரிந்து ஏற்றுக்கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது. இதேபோல, பழனி, சுவாமிமலை, மருதமலை மற்றும் பச்சைமலை உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

பழனி சூரசம்ஹார நிகழ்வு (Credit - ETV Bharat Tamil Nadu)

பழனி: அறுபடைவீடுகளில் மூன்றும் படை வீடான பழனியில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவ.07) மாலை நடைபெற்றது. இந்த விழாவில், மலைக்கோயிலிலிருந்து கீழே இறங்கிய முகத்துக்குமாரசாமி, மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கி வந்தார். தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் முருகன் சக்திவேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமிமலை சூரசம்ஹார நிகழ்வு (Credit - ETV Bharat Tamil Nadu)

சுவாமிமலை:முருகப்பெருமானின் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டியின் 06ம் நாளான இன்று, உற்சவர் வள்ளி தேவசேனா சமேத சண்முக சுவாமிக்கு பல்வேறு விதமான நறுமண பொருட்களை கொண்டு 108 சங்காபிசேகம், கட அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்வும், கோயில் சன்னதியில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

மருதமலை சூரசம்ஹார நிகழ்வு (Credit - ETV Bharat Tamil Nadu)

மருதமலை:முருகனின் ஆறுபடை வீடுகளை தவிர்த்து மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படும்.

அந்த வகையில், இந்த ஆண்டு, கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று (நவ.07) மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்கு முன்னதாக மருதமலை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேபோல் மருதமலை சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பச்சைமலை சூரசம்ஹார நிகழ்வு (Credit - ETV Bharat Tamil Nadu)

பச்சைமலை: கந்த சஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (நவ.07) காலை முதல் ஹோமம், அபிஷேக ஆராதனை, சக்திவேல் வாங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, பாரியூர் பிரிவு அருகே சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் காட்சியைக் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details