தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றும், நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாகவும் விளங்குவது ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில். இங்கு மூலவர் ஆதிநாதர் தாயார்கள் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி, இத்திருத்தலத்தில் ஸ்வாமி நம்மாழ்வார் திரு அவதாரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் மார்கழி திரு அத்யண உற்சவம் (பகல் பத்து இராப்பத்து) டிசம்பர் 31 ஆம் தேதி ஆரம்பித்து 21 தினங்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் சிறப்பாக காலையிலும், மாலையிலும் உற்சவர் பொலிந்து நின்ற பிரான் மற்றும் சுவாமி நம்மாழ்வார் ஆகியோருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தரிசனம் செய்யப்படும்.
இந்நிலையில் இராப்பத்து உற்சவத்தின் 8ஆம் நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சியாக வேடுபறி வைபவம் கோயில் முன்பு நடைபெற்றது. இதில் சுவாமி அழகிய நம்பியாக ஒரு கையில் தங்க கவசம், ஒரு கையில் சாட்டை, தலையில் கொண்டை, மார்பில் காசு மாலை, செண்பக மாலை, கல் பதித்த ஆபரணம், மலர் மாலைகள் அணிந்து தங்க குதிரை வாகனத்தில் ஏழுந்தருளினார். அதேபோல் திருமங்கை ஆழ்வார் கை கூப்பிய நிலையில் தோளுக்கினியானில் ஏழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியின் போது மாட வீதிகளில் வலம் வந்த பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார், ஓடிவர மற்றும் நிற்க என கள்வருக்கு பயந்தது போல் திருவிளையாடல் நடைபெற்றது.