தஞ்சாவூர்:கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார் கோயில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயிலில் நடக்கும் கல் கருட சேவை உலக பிரசித்தி பெற்றது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இந்த கோயிலில் மூலவர் சீனிவாசப் பெருமாள், தாயார் வஞ்சுளவல்லியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அதனால் இக்கோயிலில் தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது.
இங்கு மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையினை நிறைவேற்ற அவரது மகளாகத் தோன்றிய மகாலட்சுமியை மானிட உருவத்தில் வந்து சீனிவாசபெருமாள் திருக்கல்யாணம் புரிந்து கொண்டார் என புராணங்கள் கூறுகின்றன. திருமங்கையாழ்வாரால் நூறு பாசுரங்கள் அருளி மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட புண்ணிய தலம் என்ற பெருமையும் கொண்டது.
இத்தலத்தில் உலகிலேயே ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய கல்கருடன் பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். மற்ற சுவாமிகளைப் போல இவருக்கும் நாள்தோறும் 6 கால பூஜைகள் நடைபெறும். வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி என இரு முறை மட்டும் சன்னதியிலிருந்து வெளி வரும் இக்கல் கருட பகவானை, முதலில் சன்னதியிலிருந்து வெளியே வரும் போது 4 பேரும் தொடர்ந்து 8, 16, 32 என 64 பேர் என தூக்குபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்லுவர்.
பின்னர் கல்கருடன் மீண்டும் சன்னதிக்குத் திரும்பும் போது அதே முறையில் 64, 32, 16, 8 எனக் குறைந்து 4 பேருடன் சன்னதியைச் சென்றடைவது வழக்கம். இக்கல் கருட பகவானைத் தொடர்ந்து ஏழு வியாழக்கிழமை வழிபடுவதன் மூலம் பிரார்த்தனைகள் அனைத்தும் விரைந்து நிறைவேறும் என்பது ஐதீகம்.