தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் 2024; முடிவுகளும், சொல்லும் பாடங்களும்! - uk election results 2024 - UK ELECTION RESULTS 2024

பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளதன் மூலம், 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி அங்கு முடிவுக்கு வந்துள்ளது. பிரிட்டன் தேர்தல் முடிவுகள், அந்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் சொல்லும் செய்தி என்ன என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஜுலை 9 இல் உரையாற்றிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஜுலை 9 இல் உரையாற்றிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Image Credit - AP Photos)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 5:57 PM IST

ஹைதராபாத்:பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மொத்தமுள்ள 650 இடங்களில், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி 412 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இந்த அபார வெற்றியின் மூலம் 14 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அங்கு தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

கட்சிகள், வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி நிலவரம்: 2024 தேர்தல் வெற்றியின் மூலம் தொழிலாளர் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அதிரடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம், பல தொகுதிகளில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மொத்தம் 32 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. அதுவே இந்தத் தேர்தலில் அக்கட்சி 33.8 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் அதிகம் பெற்ற வாக்குகளின் மூலமே அக்கட்சி நாடாளுமன்றத்தின் 63 சதவீதம் இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம். கன்சர்வேட்டிவ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிரடியாக சரிந்துள்ளது. 2019 பொதுத் தேர்தலில் அக்கட்சி 43 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் 23.7 சதவீத வாக்குகளையே அக்கட்சி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 20 சதவீதம் வாக்குகள் சரிந்ததன் விளைவாக, கடந்தமுறை வென்ற இடங்களில் 244 தொகுதிகளை இழந்து, 121 இடங்களில் மட்டுமே இம்முறை அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்பு அமைச்சர் கிரான்ட் ஷேப் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். சட்டவிரோத குடியேற்றம், பணவீக்கம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்னைகள், கன்சர்வேட்டிவ் கட்சி வாக்காளர்களின் அதிருப்திக்கு காரணமாக தெரிகிறது.

வரி குறைப்பு, எல்லைப் பாதுகாப்பு, சட்ட விரோத குடியேற்றம் தடுப்பு உள்ளிட்ட ரிஃபார்ம் யு.கே. கட்சியின் (Reform UK Party) வியக்கத்தக்க வாக்குறுதிகளால், கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர்கள் கவரப்படும் அக்கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இக்கட்சி 14.3 சதவீதம் வாக்குகளுடன் ஐந்து இடங்களை வெற்றி பெற்றிருந்தாலும், 103 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்து கவனம் பெற்றுள்ளது.

இதேபோன்று, தாராளவாத ஜனநாயக கட்சி (Liberal Democrat Party) 71 தொகுதிகளை கைப்பற்றி, பிரிட்டனில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 2019 தேர்தலில் இக்கட்சி 11.5 சதவீதம் வாக்குகளுடன் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், இத்தேர்தலில் 12.2 சதவீதம் வாக்குகளுடன் 71 இடங்களை கைப்பற்றி பிரிட்டன் அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரிட்டனை ஆட்சி செய்துவந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் வாக்குகள் ரிஃபார்ம் யு.கே. கட்சிக்கும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தொகுதிகள் தாராளவாத ஜனநாயக கட்சிக்கும் சென்றுள்ளதை 2024 பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பிராந்திய வாரியான தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, பிரிட்டனின் வடக்கு பகுதியில் ஸ்காடிஸ்ட் தேசியக் கட்சி (SNP) 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 2019 தேர்தலை ஒப்பிடும்போது, இம்முறை 39 தொகுதிகளை இக்கட்சி இழந்துள்ளதன் மூலம், இக்கட்சியின் ஸ்காட்லாந்து தனி நாடு கோரிக்கை எடுபடவில்லை என்றே தெரிகிறது. அதேசமயம் ஸ்காட்லாந்து பிராந்தியத்தில் தொழிலாளர் கட்சி கடந்தமுறை ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை இங்கு 37 தொகுதிகளை கைப்பற்றி அசத்தி உள்ளது. வேல்ஸ் பிராந்தியத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் தேர்தல் முடிவு புள்ளி விவரங்கள் (GFX Credit - ETV Bharat)

பிரிட்டன் தேர்தல் முடிவுகள் - இந்தியாவுக்கு சாதகமா?: 2024 பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 28 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுடனான பிரிட்டனின் நல்லுறவுக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. தொழிலாளர் கட்சியின் ஆட்சியில் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு எப்படி இருக்கும் என்பதுதான் தற்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்.

'இந்தியாவுடன் கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்' என்பதுடன், 'கல்வி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் ஒருங்கிணைத்து செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முக்கியமாக, கடந்த 2019 இல் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்த ஜெர்மி கார்பின், 'காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் தலையீடு அவசியம்' என்று கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து தொழிலாளர் கட்சியின் மீது இந்தியாவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்தியாவின் சட்டரீதியான எந்தவொரு பிரச்னைக்கும் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் வாயிலாக தான் தீர்வுகாண வேண்டும் என்றும், காஷ்மீர் பிரச்னையானது இந்தியா -பாகிஸ்தான் சம்பந்தப்பட்டது; இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளின் மூலமே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கெய்ர் ஸ்டார்மர் கூறியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கை, காஷ்மீர் விவகாரம் குறித்த ஸ்டார்மரின் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது, தொழிலாளர் கட்சியின் புதிய ஆட்சியில் இருநாடுகளுக்கும் இடையே்யான நட்புறவு மேம்படும் என்றே எதிர்பார்க்கலாம்.

பிரிட்டன் தேர்தல் கற்பிக்கும் பாடம்:கன்சர்வேட்டிவ் கட்சி தமது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுடன், கட்சிக்கு புதிய தலைமையை கண்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தி உள்ளன. இவற்றை செய்ய தவறும்பட்சத்தில், கன்சர்வேட்டிவ் கட்சியின் வாக்குகள், ரிபாஃர்ம் யுகே கட்சி போன்றவற்றுக்கு தொடர்ந்து மாறுவதை தவிர்க்க இயலாது.

ஐரோப்பிய கண்டம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் வலதுசாரி சித்தாந்தத்தில் செயல்படும் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மாறாக, பிரி்ட்டன் நாடாளுமன்றத் தேர்தல், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்காளர்களின் மனநிலையையே பிரதிபலித்துள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை தொழிலாளர் கட்சியும், தாராளவாத ஜனநாயக கட்சியும் முடிந்தவரை அறுவடை செய்துள்ளன. குறிப்பாக, ரிஃபார்ம் யுகே கட்சியின் குறிப்பிடத்தக்க வெற்றி இத்தேர்தலில் கவனிக்கத்தக்கது. அதேசமயம், பல்வேறு கட்சிகள் பெற்றுள்ள மொத்த வாக்கு சதவீதமும், அவை வென்றெடுத்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர வேண்டுமா என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

எது எப்படியோ, பிரிட்டனில் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்தையும். அங்கு அமைந்துள்ள தொழிலாளர் கட்சியின் நிலையான ஆட்சியையும், நாட்டின் தொடர் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிச்சயம் வரவேற்கலாம்.

கட்டுரையாளர்: சஞ்சய் புலிபகா, தலைவர் - Politeia Research Foundation.

கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

இதையும் படிங்க:அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொலைக்காட்சி விவாதத்தில் ஓங்கி ஒலித்த ட்ரம்ப் குரல்; அடக்கி வாசித்த பைடன்!

ABOUT THE AUTHOR

...view details