தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

இந்தியா மீது கனடாவின் தவறான கண்ணோட்டம்...இருநாட்டு உறவில் தொடரும் சிக்கலின் பின்னணி! - DECODING CANADA

இந்தியாவுடனான கனடாவின் உறவு மோசமானது நீண்டகாலத்துக்கு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். சிக்கலான சர்வதேச சூழலில் இந்த கடினமான சூழலை திறம்பட சமாளிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

புதுடெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது பிரதமர் நரேந்திரமோடி, கனடா பிரதமர் ட்ரூடோ
புதுடெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது பிரதமர் நரேந்திரமோடி, கனடா பிரதமர் ட்ரூடோ (image credits-AP)

By Vivek Mishra

Published : Oct 16, 2024, 2:30 PM IST

ஹைதரபாத்:தூதரக ரீதியிலான சர்ச்சையைத் தொடர்ந்து இந்தியாவுக்கான கனடா தூதர் உட்பட தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்துக் கொண்டது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்த உடனடியான பிரச்னைக்கு காரணம், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கொல்லப்பட்டது குறித்து கனடாவில் தொடர்ந்து வரும் விசாரணை. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் நீக்கம் ஆகியவையாகும்.

ட்ரூடோ நிர்வாகம், இந்திய தூதரக அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறுகிறது. இந்த சூழல்தான் இந்தியா-கனடா உறவு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பின்னடவை உண்டாக்கி இருக்கிறது. வரும் ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் மோசமடையக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கனடாவின் குற்றச்சாட்டுதான் இந்த பிரச்னையின் மையமாகும். எனினும், இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. கனடா தாம் கூறும் குற்றசாட்டுக்கு வலுவான ஆதாரங்களை இன்னும் கொடுக்கவில்லை என்று இந்தியா கூறுகிறது. அது போன்ற ஆதாரம் இருக்கும் பட்சத்தில் தூதரக மட்டத்திலான தொடர்புகள் மூலம் இந்தியாவிடம் பகிரப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. குறிப்பாக கனடாவின் உள்நாட்டு அரசியல் சிக்கலாக இருக்கும் சூழலில் அதற்கு மாறாக பொது வெளியில் கனடா, இந்தியா மீது குற்றம் சாட்டியது கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குவதாக உள்ளது.

ட்ரூடோவின் அரசியல் கணக்கீடுகள் :இந்தியாவின் பஞ்சாப்பில் பலதசாப்தங்களுக்கு முன்பு காலிஸ்தான் இயக்கத்தின் தாக்கம் குறைந்து வந்த நிலையிலும், கனடாவின் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து உயிர்ப்புடனே இருக்கிறது. சீக்கிய சமூகத்தின் சில பிரிவினர் தொடர்ந்து பிரிவினைவாத நோக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போது ஏன் இந்த விஷயம் பெரிதாக்கப்படுகிறது என்ற கேள்வி இதன் பின்னணியில் எழுகிறது. கனடாவின் உள்நாட்டு அரசியல் இதன் பின்னணியில் இருக்கிறது என்பதுதான் இதன் பதிலாக இருக்கக்கூடும். ட்ரூடோவின் லிபரல் அரசு, புதிய ஜனநாய கட்சியின் ஆதரவை சார்ந்தே இருக்கிறது. இது ஜக்மீத் சிங் தலைமையிலான அரசியல் கட்சியாகும். இவர் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர் ஆவார். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வருகிறார். ட்ரூடோவின் அபாயகரமான அரசியல் நிலையின் காரணமாக அவரது அரசு, பதவியில் நீடித்திருக்க புதிய ஜனநாய கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

புதுடெல்லியில் உள்ள கனடா தூதரகம் (Image credits-PTI)

தற்போதைய தூதரக சிக்கல்களை புரிந்து கொள்ள, கனடாவின் அரசியலை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். ட்ரூடோவின் லிபரல் கட்சி, 2015ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருந்து வந்து வந்த போதிலும், ஆட்சியில் நிலைத்திருக்க தொடர்ந்து போராடி வருகிறது. அவரது அரசு இப்போது நாடாளுமன்றத்தில் 150 இடங்களுக்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பியர் போய்லிவெரே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி அவருக்கு சவாலாக திகழ்கிறது. 2025ஆம் ஆண்டு கனடாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கருத்து கணிப்புகளில் லிபரல் கட்சியை விடவும் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ட்ரூடோ தமது அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் உள்ளார்.

இதையும் படிங்க:"நீங்க செய்றது கொஞ்சமும் சரியில்ல" - கனடாவுக்கான தூதரை திரும்பப் பெறும் இந்தியா!

ட்ரூடோவின் புகழ் மங்கத் தொடங்கியதற்கு மூன்று விஷயங்கள் காரணமாக இருக்கின்றன என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக குடியேற்றங்கள், ஆட்சிக்கு எதிரான அலை, அடையாளம் மற்றும் பணவீக்கம் ஆகியவை காரணமாக அவரது ஆட்சி செல்வாக்கை இழந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருவது அவரது அரசின் மீதான பொருளாதார நம்பகத்தன்மையை மிகவும் பாதித்திருக்கிறது. விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படாத குடியேற்றங்கள் கனடாவின் மாற்றமடையும் மக்கள் தொகை எண்ணிக்கையில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் கனடா குடியேற்ற கொள்கையில் திறந்த மனதோடு கூடியதாக இருந்தது. இப்போதைய அரசியல் சூழலில் இது நீண்டகாலத்துக்கு நீடித்திருக்காது. இந்த உள்ளூர் சிக்கலை திசை திருப்புவதற்காக சர்வதேச சர்ச்சைகளை கையில் எடுத்திருக்கும் ட்ரூடோவின் முயற்சியானது, அவரது அரசியல் வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலானதாக இருக்கலாம்.

காலிஸ்தான் விவகாரம் கடந்தகால யுகத்தின் தொடர்ச்சி :காலிஸ்தான் இயக்கத்தின் தளமாக கனடா நீண்டகாலமாக இருந்து வருகிறது. புலம்பெயர்ந்த சீக்கியர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்த தாக்கமானது, பிரிவினைவாத நோக்கங்களுக்கு அங்கீகாரத்தை முன்னெடுத்தல், அரசியல் பிரநிதித்துவத்தை அடைதல், கனடாவின் சமூகத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை கொண்டிருப்பதாக உள்ளது.

ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டபோது பஞ்சாப்பின் அமிர்தசரசில் நடந்த போராட்டம் (Image credits-ANI)

காலிஸ்தான் விவகாரம் கடந்தகால யுகத்தின் தொடர்ச்சி என்பது ஒரு முரணாக இருக்கலாம். பஞ்சாப்பில் உள்ள இளம் சீக்கியர்களுக்கு இது பெரும்பாலும் தொடர்பில்லாததாக இருக்கலாம். அதில் இருந்து அவர்கள் நகர்ந்து விட்டனர். எனினும், கனடாவில் இந்த விவகாரம் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. ஜக்மீத் சிங் போன்ற அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்த சீக்கியர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகின்றனர். ட்ரூடோ அரசு இதன் தீவிரத்தை உணர்ந்தே இருக்கிறது. எனவே, இந்தியாவுடனான உறவை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதை விடவும் உள்ளூர் அரசியல் கருத்தியல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விரும்புகிறார். இதன் காரணமாக லிபரல் கட்சி இந்தியாவுடனான உறவை அபாயத்துக்கு உள்ளாக்குவது மட்டுமின்றி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முக்கியமான கூட்டாண்மையின் நட்புணர்வில் அபாயத்தையும் முன்னெடுப்பதாக இருக்கிறது.

இந்திய இறையாண்மையின் மீது நேரடி தாக்குதல் :இறையாண்மை எனும் விஷயம் இந்த சிக்கலின் மையமாக இருக்கிறது. உலகின் சக்தியாக வளர்ந்து வரும் இந்தியா உலக அரங்கில் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து வரும் நிலையில், அதன் உள்நாட்டு விவகாரங்களில், குறிப்பாக பிரிவினைவாதத்தில் எந்த ஒரு வெளிநாட்டின் தலையீடையும் விரும்பவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதம் முன்னெடுக்கப்படுவது இந்தியாவின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படுகிறது. நிஜ்ஜார் கொலை தொடர்பான விஷயத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் உள்நாட்டு ஒற்றுமையை சீர்குலைக்கும் யார் ஒருவருக்கும் எந்த ஒரு நாடும், எந்த ஒரு தொலைவில் இருந்தபோதிலும், ஆதரவு அளிக்கக் கூடாது என்ற தெளிவான செய்தியையே இந்தியா சொல்கிறது.

காலிஸ்தான் அமைப்பினரை கனடா சுதந்திரமாக உலவ விடுவது, சர்வதேச அரங்கில் அதன் நிலையை சமரசத்துக்கு உள்ளாக்குவதாகும். இந்தியாவுடனான உறவில் சீர்குலைவு என்பது நீண்டகாலத்துக்கு விளைவுகளை ஏற்படுத்தும் காரணியைக் கொண்டதாகும். குறிப்பாக கனடா சிக்கலான சர்வதேச சூழலில் இந்த கடினமான நிலையை திறம்பட சமாளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாட்டின் வெளியுறவு கொள்கையை வடிவமைப்பதில் உள்ளூர் அரசியல் முக்கிய பங்கு வகிக்கும் போது, கனடா இதை ஒரு புதிய உச்சநிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

ட்ரூடோவின் நடவடிக்கைகள் தூதரக உறவில் தீவிரமான பிளவை ஏற்படுத்துவதை முன்னோக்கியதாக உள்ளது. இந்தியா-கனடா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ஒத்துழைப்புக்கான வாய்ப்பு என்பது குறைவாகவே உள்ளது. கனடாவின் தவறான கண்ணோட்டம் சர்வதேச தெற்கு பிராந்தியம், இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றில் முக்கியமான நாடாக இருக்கும் இந்தியாவை கோபப்படுத்துகிறது. இது சரி செய்யமுடியாத பாதிப்பை நோக்கி இட்டுச் செல்லலாம்.சீனாவுடனான அதன் உறவு ஏற்கனவே சிக்கலாக உள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது கனடா ஆசிய உறவை இழக்க நேரிடலாம்.

ட்ரூடோ 2025ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்கிறார். அதில் அவர் வெற்றி பெறுகிறார் அல்லது தோற்கிறார் என்பது கேள்வி அல்ல. தீவிரவாதத்தை கைகழுவி விட்டு மீண்டு வருவாரா என்பதில் என்னவிதமான மரபை தமக்கு பின்னால் விட்டு செல்ல உள்ளார் என்பதில்தான் கேள்வி அடங்கி இருக்கிறது. இந்தியா-கனடா இடையேயான உறவின் மோசமான நிலையை சீர் செய்வது சிக்கலான ஒன்றாக இருக்கும். பல ஆண்டுகளாக வேகமாக கட்டமைக்கப்பட்ட இது இப்போது தரைதட்டி நிற்கிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details