தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

ஆபாச படம் பார்ப்பது குற்றமா? சிறார் ஆபாச பட வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்னது என்ன? - Child pornography Row - CHILD PORNOGRAPHY ROW

சிறார் ஆபாசப் படங்கள் என்பது ஒரு குழந்தை பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட மற்றும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்களின் பதிவுகள் என்பதைத் துல்லியமாக பிரதிபலிக்க வேண்டும். எனவே, நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். அதாவது போக்சோ சட்டத்தின் பெயரை 'சிஎஸ்இஏஎம்' (Child Sexual Exploitative and Abuse Material) என திருத்துவது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்குமாறு நாடாளுமன்றத்தை இந்த வழக்கின் தீர்ப்பு வலியுறுத்துகிறது.

உச்ச நீதிமன்றம் கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat)

By Ritwika Sharma

Published : Oct 3, 2024, 6:36 AM IST

Updated : Oct 3, 2024, 4:31 PM IST

ஹைதராபாத்:சிறார் ஆபாசப் படங்களைத் தடுப்பதற்கான சட்டத்தின் ஒரு பெரிய முன்னெடுப்பாக, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, சிறார் ஆபாசப் படங்களைப் பார்ப்பது, வைத்திருப்பது மற்றும் புகாரளிக்காதது கூட, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ சட்டம்) 2012-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு, நீதிபதி ஜே.பி.பர்திவாலா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, குழந்தைகளின் ஆபாசப் படங்களைச் சேமித்து வைப்பது என்ன குற்றம் என்பதற்கு உறுதியான விளக்கத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிறார் ஆபாசப் படங்களை வெறுமனே வைத்திருப்பது அல்லது சேமித்து வைப்பது குற்றம் அல்ல என தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 'குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு' (Just Rights for Children Alliance) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த தீர்ப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்கள் பரவலை தடுப்பது மட்டுமின்றி, மக்கள் அவற்றுக்கு அடிமையாவதையும் இந்தத் தீர்ப்பு தடுத்து காப்பாற்றுகிறது.

எது தண்டனைக்குரியது?:இந்த தீர்ப்பின் நடுநாயகமாக போக்சோ சட்டத்தின் இரண்டு விதிகள் (பிரிவுகள் 14 மற்றும் 15) உள்ளன. பிரிவு 14 ஆனது ஒரு குழந்தை அல்லது குழந்தைகளை பாலியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கிறது. இரண்டாவது முறை அல்லது தொடர் குற்றத்தில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்கிறது.

போக்சோ சட்டப் பிரிவு 15 ஆனது, மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிவு 15 (1) சிறார் சம்பந்தப்பட்ட ஆபாசப் பதிவுகளை சேமித்து வைப்பதற்கு அல்லது வைத்திருந்ததற்கு தண்டனையை பரிந்துரைக்கிறது. சிறார் ஆபாசப் படங்களைப் பகிரும் நோக்கத்துடன் வைத்திருப்பது, நீக்காமலோ, அழிக்காமலோ அல்லது இதுகுறித்து உரிய அதிகாரியிடம் புகாரளிக்கத் தவறினாலோ குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதமும், இதே குற்றச் செயலில் மறுபடியும் ஈடுபட்டாலோ அல்லது தொடர்ந்து ஈடுபட்டாலோ ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது.

பிரிவு 15 (2)-ன் கீழ், புகாரளிக்கும் நோக்கம் அல்லது நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்துவது ஆகியவற்றைத் தவிர, சிறார் தொடர்புடைய ஆபாசப் படங்களை பகிர்தல், பரப்புதல், விநியோகித்தல் அல்லது காட்சிப்படுத்துதல் ஆகியவை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தும் விதிக்க வழிவகை செய்கிறது.

பிரிவு 15 (3) ஆனது, சிறார் ஆபாசப் படங்களை வணிக நோக்கத்துடன் வைத்திருப்பது அல்லது சேமித்து வைப்பதை தடை செய்து தண்டனை வழங்க வழிவகை செய்கிறது. சிறார் ஆபாசப் படங்களை விநியோகிப்பது அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தும் நோக்கம், பிரிவு 15-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முக்கியமானதாகும் என இதற்கு முன்பு, இத்தகைய வழக்குகளை விசாரித்த பல்வேறு உயர் நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளன.

உண்மையில், மேல்முறையீடு செய்யப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பானது, சிறார் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்வது அல்லது பார்ப்பதானது, போக்சோ அல்லது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 (ஐடி சட்டம்)-ன் கீழ் தண்டனைக்குரியது அல்ல என குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்தது.

ஆனால், பிரிவு 15-ன் உட்பிரிவுகள் ஒவ்வொன்றும் கட்டுப்பாடற்ற குற்றங்களுக்கு வகை செய்வதாக உச்ச நீதிமன்றம் இப்போது தெளிவுபடுத்தியுள்ளது. பிரிவு 15, மூன்று வெவ்வேறு நோக்கங்களுடன் ​​சிறார் ஆபாச படங்களை சேமித்து வைப்பது அல்லது வைத்திருப்பதற்கு அபராதம் விதிக்கிறது என நீதிபதி பர்திவாலா விளக்கினார்.

15-வது பிரிவின் கீழ் சிறார் ஆபாசப் படங்களை சேமித்து வைத்திருப்பது அல்லது அழிக்க தவறி வைத்திருப்பது குற்றமாகும். பிரிவு 15-ன் ஒவ்வொரு துணைப் பிரிவும் தனித்தனி குற்றங்களைத் தீர்மானிப்பதில் ஒன்றையொன்று சாராதது. குறிப்பாக, பிரிவு 15(1)-ன் கீழ், புகாரளிக்கப்படாவிட்டாலும் ஆபாசப் படங்களை வைத்திருப்பதன் நோக்கம் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவரால் நீக்கப்படும் வரை, அழிக்கப்படும் வரை அல்லது புகாரளிக்காத வரை ஆபாசப் படத்தை வைத்திருக்கும் செயல் பிரிவு 15(1)-ன் கீழ் குற்றமாகும். ஒவ்வொரு வழக்கிலும் ஆபாசப் படம் எவ்வாறு வந்தது என்பதற்கான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.

தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67-பி தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு பொருத்தமான விளக்கத்தை அளித்துள்ளது. குழந்தைகளை வெளிப்படையான பாலியல் செயலில் சித்தரிக்கும் படங்களை மின்னணு வடிவத்தில் வெளியிடுவது அல்லது பகிர்வதை இச்சட்டம் தண்டிக்கிறது. குழந்தைகள் ஆபாசப் படங்களை மின்னணு வடிவில் பரப்புதல் மட்டுமின்றி, அதனை உருவாக்குவது, வைத்திருப்பது மற்றும் பார்ப்பது ஆகிய செயல்களையும் சட்டப் பிரிவு 67-பி தண்டிக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடக இடைத்தரகர்களின் கடமைகள்:சிறார் ஆபாசப் படங்களைப் பரப்புவதில் சமூக ஊடக இடைத்தரகர்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் போக்சோ சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களின் கீழ், இத்தகைய சிறார் ஆபாசப் படத்தின் வெளியீடு மற்றும் புழக்கம் குறித்து புகாரளிப்பதற்கான சமூக ஊடகங்களின் கடமை குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது.

எந்தவொரு மூன்றாம் தரப்பு தகவல், தரவு அல்லது தகவல்தொடர்பு இணைப்பு ஆகியவற்றிற்கான பொறுப்பிலிருந்து இடைத்தரகர்களைப் பாதுகாக்கும் விதியானது, இடைத்தரகர்களிடம் கிடைக்கும் அல்லது ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கும் சிறார் ஆபாசப் படங்களுக்குப் பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஆதார நிரூபணத்தின் சுமை குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றத்துக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் குற்ற மனநிலை இருப்பதாக சிறப்பு நீதிமன்றம் கருதும் என போக்சோ சட்டத்தின் பிரிவு 30 கூறுகிறது. மேலோட்டமாக பார்த்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சில அடிப்படை உண்மைகள் நிறுவப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று காட்ட வேண்டிய சுமை இப்போது உள்ளது.

உதாரணமாக, பிரிவு 15(1)-ன் கீழ் ஒரு குற்றத்துக்காக, குற்றம் சாட்டப்பட்டவர் சிறார் ஆபாசப் படங்களை வைத்திருந்தார் என்ற அடிப்படை உண்மையை மட்டுமே அரசுத் தரப்பு காட்ட வேண்டும். மேலும், அதை அகற்றவோ அல்லது புகாரளிக்கவோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரணையின்போது நீதிமன்றம் குறிப்பிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்பதை உறுதிப்படுத்தும் சுமை அவர்கள் மீது உள்ளது. அதை பிரிவு 15(1)-ன் வரம்புக்குள் கொண்டு வரக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வார்த்தை பயன்பாடு மீதான அச்சம்:முக்கியமாக, 'சிறார் ஆபாசப் படங்கள்' என்ற வார்த்தையின் பயன்பாடு குறித்த அச்சத்தை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியது. இது குற்றத்தின் முழு தன்மையையும் குறிப்பிடுவதற்கான போதாமை உள்ள தவறான பெயராகும். 'சிறார் ஆபாசப் படம்' என்பது குழந்தையை உண்மையில் வன்கொடுமை செய்வதை உள்ளடக்கியது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

'சிறார் ஆபாசப் படம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குற்றத்தை அற்பமானதாக மாற்றக்கூடும். ஏனெனில், ஆபாசப் படம் பெரும்பாலும் பெரியவர்களுக்கிடையே ஒருமித்த செயலாகக் கருதப்படுகிறது. எனவே இதை தவிர்க்க, 'சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் வன்கொடுமை படம்' (Child Sexual Exploitative and Abuse Material) அல்லது 'சிஎஸ்இஏஎம்' என்ற வார்த்தையை நீதிமன்றம் முன்வைத்துள்ளது.

சிறார் ஆபாசப் படங்கள் என்பது ஒரு குழந்தை பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட மற்றும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்களின் பதிவுகள் என்பதை துல்லியமாக பிரதிபலிக்க வேண்டும். எனவே, நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். அதாவது, போக்சோ சட்டத்தின் பெயரை 'சிஎஸ்இஏஎம்' என திருத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்குமாறு நாடாளுமன்றத்தை இந்த வழக்கின் தீர்ப்பு வலியுறுத்துகிறது.

மேலும், எந்தவொரு நீதித்துறை உத்தரவு அல்லது தீர்ப்பிலும் 'குழந்தை ஆபாசப் படங்கள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக 'சிஎஸ்இஏஎம்'- என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மற்ற நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

கடுமையாக்கப்பட்ட சட்டக் கூறுகள்:மற்றொரு ஆக்கப்பூர்வமான முன்னேற்றமாக, சிறார் பாலியல் வன்கொடுமை படங்கள் குற்றம் தொடர்பான சட்ட மற்றும் நெறிமுறை மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரிவான பாலியல் கல்வித் திட்டங்களை செயல்படுத்துமாறு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

சிறார் பாலியல் வன்கொடுமை படங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள், சிகிச்சை அளித்தல் மற்றும் கல்வி உதவி வழங்குதல் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மாநில உயர் நீதிமன்றங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கிய போக்சோ சட்டத்தின் விதிகளின் மாற்று அல்லது வேறுபட்ட விளக்கங்களுக்கு இந்த தீர்ப்பு முடிவான ஓய்வு அளிக்கிறது. சில உயர் நீதிமன்றங்கள் வழக்குகளில் சிறார் வன்கொடுமை ஆபாசப் படங்களை வைத்திருந்தது மற்றும் பகிர்ந்தது ஆகிய தனிக் குற்றங்களை ஒரே ஒரு குற்றமாக கருதுகின்றன.

அவற்றை தனித்தனியாகப் படிப்பதன் மூலம், உச்ச நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கூறுகளை கடுமையாக்கியுள்ளதை அறியலாம். இதன் அடிப்படையில், சிறார் பாலியல் வன்கொடுமை படங்களை வைத்திருக்கும் செயலையும் தண்டிக்க முடியும். 2021-2022 காலத்தில் போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 14 மற்றும் 15-ன் கீழ் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 1,200-க்கும் அதிகமாக உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022-ல் இணைய குற்றங்களால் சிறார்கள் பாதிக்கப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1,823 ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 32 சதவீதம் அதிகமாகும். எண்ணிக்கை இவ்வாறு கவலைக்குரியதாக இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதில் நீண்ட தூரம் செல்லக்கூடும். இந்த தீர்ப்பு அனைத்து சரியான விஷயங்களையும் கூறுகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இதை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் தீர்ப்பு அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வரப்படும் என நம்ப முடியும்.

Last Updated : Oct 3, 2024, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details