ஹைதராபாத்:அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் தலைமையிலான ஏழு பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு, புத்த துறவியான தலாய் லாமாவை சந்தித்ததுதான் சர்வதேச அரசியலில் சமீபத்திய பேசுபொருள் எனலாம்.
ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான மைக்கேல் மெக்கால் தலைமையிலான இக்குழுவில், குடியரசுக் கட்சியின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியும் இடம்பெற்றிருந்தார். இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள தலாய் லாமாவை ஜூன் 19 ஆம் தேதி இக்குழுவினர் சந்தித்துப் பேசினர். தலாய் வாமாவை சந்திப்பதற்கு முன் இக்குழு, நாடு கடத்தப்பட்ட திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசாங்க பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியது. சீனா - திபெத் இடையே நீண்டகாலமாக நீடித்துவரும் பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் கடந்த ஜுன் 12 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்க எம்.பி.க்கள் குழு தலாய்லாமாவை சந்தித்தது.
தீர்மானம் சொல்வதென்ன?:திபெத் மீதான சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை கண்டித்துள்ள அமெரிக்க செனட் தீர்மானம், சீனாவுக்கு எதிரான திபெத்தியரின் போராட்டத்துக்கு துணை நிற்கும் என்றும் உறுதி அளிக்கிறது. அத்துடன் திபெத்தின் தனிப்பட்ட வரலாறு, கலாச்சாரம், மதம் மற்றும் மொழியியல் அடையாளத்தையும்,. திபெத்தின் பன்முக சமூக-கலாச்சார அடையாளத்தையும் காணாமல் போகச் செய்யும் சீனாவின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதற்கு தேவையான நிதியை திபெத்தியர்கள் பெறுவதையும் அமெரிக்க தீர்மானம் ஊக்குவிக்கிறது. மொத்தத்தில் திபெத்தின் வரலாறு குறித்த சீனாவின் திரிபுகளில் இருந்து, அதன் உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க அந்நாட்டு மக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தலாய்லாமாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என இத்தீர்மானம் உறுதி அளிக்கிறது.
வெற்றுக் காகிதம் என சீனா விமர்சனம்:தலாய் லாமா உடனான அமெரிக்க பிரதிநிதிகளின் இச்சந்திப்பு சீனாவை கடும் கோபமடைய செய்யும் என்பதை சர்வதேச சமூகம் எதிர்பார்த்ததுதான். இந்த எதிர்பார்ப்புக்கு இணங்கவே, சீன அரசு நாளிதழான 'குளேபல் டைம்ஸ்' ஜுன் 20 ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், திபெத் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஓர் வெற்றுக் காகிதம் என்றும், முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது எனவும் அக்கட்டுரையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தலாய்லாமாவை பிரிவினைவாதி என்று குறிப்பிட்டிருந்த சீன நாளேடு, இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர் சர்வதேச சமூகத்தால் மேன்மேலும் புறக்கணிப்பட்டுள்ளார்; உண்மையில் அவர் ஒரு ஆன்மிகவாதியே அல்ல எனவும் சாடியிருந்தது. பூர்வீக அமெரிக்கர்களுக்கு கடந்த காலங்களில் நேர்ந்த கொடுமைகளை மறந்துவிட்டு, திபெத் குறித்து பொறுப்பற்ற முறையில் கருத்துகளை சொல்வதா? என்று நான்சி பெலோசி உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகளையும் குளோபல் டைம்ஸ் கட்டுரை கடிந்து கொண்டிருந்தது.
திபெத்திய குழந்தைகளுக்கு கம்யூனிசம் போதித்த சீனா:1950 இல், கம்யூனிச சீன அரசு திபெத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்து கொண்டபின், அப்பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்கள் தொடங்கியன. முக்கியமாக, ஆக்கிரமிப்பு திபெத்திய பகுதிகளில் சீனாவின் ஹன் இனமக்களை அதிகமாக குடியமர்த்தியதன் மூலம் திபெத்தின் அடையாளத்தை அழிக்க தொடங்கியது. அத்துடன் அந்த காலகட்டத்தில் திபெத்திய குழந்தைகள், சிறுவயதிலேயே அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு உண்டு உறைவிடப் பளளிகளில் சேர்க்கப்பட்டு, கம்யூனிச சித்தாந்தம் குறித்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டதாக உறுதியாக நம்பப்படுகிறது. திபெத்திய மாணவர்களை அவர்களின் பாரம்பரிய, கலாச்சாரத்தில் இருந்து மிகவும் கவனமாக பிரித்த சீன அரசு, அவர்களுக்கு மாண்டரின் கம்யூனிச சித்தாந்தங்களை போதித்தது.
இந்த நிலையில், கதுன் கோக்கி நைமா எனும் ஆறு வயது சிறுவனை 11-வது பஞ்சன் லாமாவாக 1995 இல் தலாய் லாமா அறிவித்தார். திபெத்திய பாரம்பரிய முறைப்படி, தமக்கு அடுத்த இரண்டாவது பெரிய ஆன்மீக நபராக நைமாவை தலாய் லாமா இதன் மூலம் அங்கீகரித்தார். இந்த அறிவிப்பு வெளியான இரண்டே நாட்களில் சிறுவன் கதுன் கோக்கி நைமா சீனப் படைகளால் கடத்தப்பட்டார். இதுநாள்வரை அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில், சியான் கெய்ன் நோர்பு என்பவரை நைமாவின் இடத்துக்கு சீனா நியமித்தது. அவரது நியமனத்தை தலாய் லாமா வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், தற்போதைய பஞ்சன் லாமாவும் சீனாவின் பிரதிநிதியாக உள்ளதாகவே தெரிகிறது.
திபெத்தின் மீது சீனாவுக்கு ஏன் இவ்வளவு ஆசை?:திபெத்திய பீடபூமி பகுதிகள் நிலக்கரி, தாமிரம், குரோமியம், லித்தியம், துத்தநாகம், ஈயம் என அபரிமிதமான கனிம வளங்களை கொண்டுள்ளன. இதன் காரணமாகவே இப்பகுதிகளில் தமது ஆளுமையை வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது. இப்பகுதிகளில் சீனாவால் மேற்கொள்ளப்பட்டுவரும் உள்கட்டமைப்பு பணிகள், தொழில்மயமாக்கல் மற்றும் அவசர கதியில் கட்டப்படும் சுரங்கங்கள் இப்பகுதிகளின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராடி வந்தாலும் இதுநாள்வரை அதற்கு பலனில்லை. அத்துடன், திபெத்தின் பரந்துவிரிந்த நீர் வளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் அண்டை நாடுகளை வெல்ல சீனா விரும்புகிறது.