ஹைதராபாத்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (பிப்.1) தாக்கல் செய்த 2025 -26 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு மொத்தம் 6,81,210 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். இந்தத் தொகை முந்தைய ஆண்டின் பட்ஜெட்டை ஒப்பிடும்போது 9.53 சதவீதம் அதிகமாகும். நிதியமைச்சரின் இந்த அறிவிப்பை வெகுவாக பாராட்டியுள்ள மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம், 'பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்கான அரசின் மூலதன முதலீடு, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) பெருக்கும் என்பதுடன், நம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பையும் அளிக்கும்' என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளது.
படிப்படியாக குறையும் நிதி ஒதுக்கீடு: இந்த முறை பட்ஜெட்டில் துறைவாரியாக அறிவிக்கப்பட்டுள்ள நிதியில், பாதுகாப்புத் துறைக்குதான் அதிகபட்சமாக 13.45% ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஐந்தாண்டுகளாகவே மத்திய பொது பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி 14 சதவீதத்துக்கு குறைவாகவே இருந்து வருகிறது. இது நாட்டின் ஜிடிபியில் வெறும் 1.91 சதவீதமாகும்.
அத்துடன் ஒவ்வொரு பட்ஜெட்டிலும ஒதுக்கப்படும் மொத்த நிதி ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்துவரும் நிலையில், பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைந்து வருகிறது. 2020-21 ஆண்டு பட்ஜெட்டில் 2.4% ஆக இருந்த பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, 2022-23, 2024 -25 ஆகிய நிதியாண்டுகளில் முறையே 2.1%, 1.98% என குறைந்து, தற்போது 1.91% மட்டுமே இத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தையை பட்ஜெட்டை ஒப்பிடும்போது இம்முறை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி 9.53 சதவீதம் அதிகரித்து இருந்தாலும், ஜிடிபியுடன் ஒப்பிடும்போது இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 0.07 சதவீதம் குறைந்துள்ளது.
சம்பவம் நடந்தால் மட்டுமே..கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய -சீன ராணுவ வீரர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் 2020 ஜுன் மாதம் நிகழ்ந்தது. அக்கொடூர சம்பவத்துக்கு பிறகு, 2020-21 நிதியாண்டில் பாதுகாப்பு துறைக்கான செலவினங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இச்செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது கல்வான் தாக்குதல் போன்ற பிரச்னைகள் எழும்போது மட்டுமே நமது அரசாங்கம் பாதுகாப்பு துறைக்கான செலவினத்தை அதிகரிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், நாட்டின் ஜிடிபியில் 2.5 - 3 சதவீதம் வரை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், இந்த எதிர்பார்ப்பு இன்னமும் நிறைவேறாத கனவாகவே இருந்து வருகிறது.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2025 : நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் முதலீடுகள், வேலைவாய்ப்பு - ஓர் பகுப்பாய்வு!
அமெரிக்கா சீனாவை பாருங்கள்:நேட்டோ கூட்டமைப்பை வலுப்படுத்த இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் பாதுகாப்புத் துறைக்கு தங்களது நாட்டின் ஜிடிபியில் 5 சதவீதம் தொகையை ஒதுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் எதுவும் இந்த இலக்கை இதுவரை எட்டவில்லை. சொல்லப்போனால் அமெரிக்காவே பாதுகாப்புத் துறைக்கு 3.5 சதவீதத்துக்கு சற்று அதிகமாக தான் பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது. ஆயினும் இது இந்தியா ஒதுக்கும் நிதியைவிட மிக அதிகமாகும். இதேபோன்று, சீனா பாதுகாப்புத் துறைக்கான நிதியை 1.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், சீனாவின் ஜிடிபி இந்தியாவைவிட ஐந்து மடங்கு அதிகம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படியும், உலக அளவில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியானது ஒட்டுமொத்த ஜிடிபியில் சராசரியாக 1.8 சதவீதமாகதான் உள்ளது.
ஒவ்வொரு நாட்டுக்கும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இந்தியாவை பொறுத்தவரை உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு அவசியமாக உள்ளது. ஆனால், ஒரு தேசத்துக்கு உள்ளேயும், வெளியே இருந்தும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் இருந்துகொண்டே இருந்தால், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான முதலீடுகளை ஈர்க்க இயலாது என்பதே உண்மை.
கொள்முதல் நடைமுறை:பாதுகாப்புத் துறைக்கான மூலதன பட்ஜெட் இம்முறை ரூ.1,85,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது இத்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் மொத்தத்தொகையில் 27% ஆகும். இதிலிருந்து சுமார் ரூ.1,50,000 கோடி முப்படைகளின் நவீனமயமாக்கலுக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விமானம் மற்றும் விமான இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.48,614 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.24,390 கோடி கடற்படையை மேம்படுத்தவும், ரூ.63,099 கோடி பிற உபகரணங்களை வாங்குவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.31,000 கோடி பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்கும், எல்லை பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், பாதுகாப்புத் துறையின் நவீனமயமாக்கலுக்கு 27% நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவு.