சைவம், அசைவம் என எந்த வகையான உணவுகளாக இருந்தாலும், அதற்கு முழு சுவை வழங்கக்கூடியது நாம் சேர்க்கும் மசாலா தான். இதற்காக, கடைகளில் இருந்து கரம் மசாலா, பிரியாணி மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் என வகைவகையான மசாலாக்களை நமது சமையலறையில் அடுக்கி வைத்திருப்போம். இப்படி, கடைகளில் வாங்குவதை தவிர்த்து அனைத்து குழம்புக்கும் அட்டகாசமாக இருக்கும் குழம்பு மசாலா தூளை வீட்டிலேயே தயார் செய்து பாருங்கள்..குழம்பு மசாலா பொடி எப்படி அரைப்பது? எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- காய்ந்த மிளகாய் - 1 கிலோ
- மல்லி (தனியா) - 1 கிலோ
- கடலைப் பருப்பு - 100 கிராம்
- துவரம் பருப்பு - 100 கிராம்
- பச்சை/புழுங்கல் அரிசி - 100 கிராம்
- சீரகம் - 200 கிராம்
- சோம்பு - 100 கிராம்
- கடுகு - 100 கிராம்
- மிளகு - 200 கிராம்
- வெந்தயம் - 25 கிராம்
- கொம்பு மஞ்சள் - 25 கிராம்
- கறிவேப்பிலை - 3 கைப்பிடி
குழம்பு மசாலா தூள் அரைப்பது எப்படி?:
- முதலில், காய்ந்த மிளகாய் மற்றும் மல்லியை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். இரண்டும் மொறு மொறு என்ற பதத்தில் இருப்பதே சிறந்தது.
- இப்போது, மற்ற பொருட்களை தீயில் வறுத்து கொள்ள வேண்டும். அதற்கு அடுப்பில் ஒரு வாணாலியை வைத்து சூடானதும், பின் மிதமான தீயில், கடலைப்பருப்பை சேர்த்து பொறுமையாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
- கடலைப்பருப்பு வறுப்பட்டதும், ஒரு தட்டில் மாற்றி வைக்கவும். அடுத்ததாக, இதே பக்குவத்தில் தனித்தனியாக துவரம் பருப்பு, அரிசி, சீரகம், சோம்பு, கடுகு, மிளகு, வெந்தயம், கொம்பு மஞ்சள், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். (கொம்பு மஞ்சளை மிளகாய், மல்லியுடன் வெயிலிலும் காய வைக்கலாம்).
- அடுத்ததாக, இந்த சூடான பொருட்கள் நன்கு ஆறியதும், மல்லியுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். மிளகாயை தனியாக வைக்க வேண்டும். இப்போது இவற்றை ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள்.
- ரைஸ் மில்லில் இருந்து அரைத்து வந்த மாவை, செய்தித்தாளில் அல்லது சுத்தமான காட்டன் துணியில் பரப்பி நன்கு ஆறவைக்க வேண்டும். பின்னர், காற்று புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்தலாம். மேலே, குறிப்பிட்டப்பட்ட அளவில் மசாலாவை அரைத்தால் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க:
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்