ஒருவர் தவிர்க்கவே கூடாத உணவு என்றால் அது காலை உணவு தான். ஆனால், பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் காலை உணவை செய்யவும் உண்ணவும் நேரமில்லாமல் பலரும் அலுவலகத்திற்கு ஓடிக்கொண்டிருக்கின்றனர். காலை உணவா..என்ன செய்வது? எளிமையாகவும் சத்தாகவும் செய்யும் ப்ரேக்பாஸ்ட் எதாவது இருக்கா? என பலரும் இணையத்தில் தேடி சலிப்படைந்துவிடுகிறோம். அந்த வகையில், செய்வதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் உடல் இழப்பிற்கு உதவியாக இருக்கும் அவல் உப்புமாவை வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- அவல் - 2 கப்
- வேர்க்கடலை - 1/2 கப்
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 3
- வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 4
- இஞ்டி - 1 துண்டு
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவௌயான அளவு
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அவல் உப்புமா (போஹா) செய்முறை:
- அவலை தண்ணீரில் மூன்று முறை நன்கு கழுவி, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்
- இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
- பின்னர், அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதில், உளுத்தம்பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வெடித்ததும் சிவப்பு மிளகாயை இரண்டாக கிள்ளி சேர்க்கவும்.
- அடுத்ததாக, நறுக்கி வைத்த வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- அனைத்தும் நன்கு வதங்கியதும், அவலை சேர்த்து அனைத்தையும் கரண்டியால் நன்கு கிளறி வறுத்து வைத்த வேர்க்கடலை சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும். அவ்வளவு தான் சுவையான மற்றும் 5 நிமிடங்களில் தயாராகும் அவல் உப்புமா தயார்.
- இந்த அவல் உப்புமா மீது அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து கொஞ்சமாக மிக்சர் அல்லது பூந்தி தூவி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.