முக லட்சணத்துடனும், கொஞ்சம் கிளாமராகவும் இருக்கும் பெண்கள் மட்டுமே மக்கள் மற்றும் சினிமாவால் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், நம்மை சுற்றி இருக்கும் பெண்களைப் போல பருக்கள் நிரம்பிய முகத்துடன் அறிமுகமாகி, சினிமாவில் அழகு என்ற இலக்கணத்தை மாற்றி வெற்றி பெற்ற நடிகையாக வலம் வருகிறார் 'சாய் பல்லவி'.
2015ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' படம் முதல் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ள 'அமரன்' படம் வரை மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார். இதுவே, சினிமா பிரியர்களிடையே சாய் பல்லவி மிகவும் பிரபலமாகவும் விரும்பப்படவும் காரணமாக இருக்கிறது.
முகப்பருவால் தாழ்வு மனப்பான்மை: 'எனது முதல் படமான பிரமேம் படத்தில் இருந்து இன்று வரை நான் ஒரு படத்தில் கூட மேக்கப் போட்டது இல்லை' எனக்கூறும் சாய் பல்லவி, பள்ளி நாட்களில் தனக்குள் தாழ்வு மனப்பான்மை இருந்ததையும் வெளிப்படுத்தியுள்ளார். முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் தனது குரலை நினைத்து வேதனை பட்டதாக கூறும் சாய் பல்லவிக்கு ஊக்கம் கொடுத்தது என்னவோ சினிமா தான்.
2005ம் ஆண்டு கஸ்தூரி மான், தாம்தூம் திரைப்படங்களில் பெயரிடப்படாத வேடங்களில் தலைகாட்டிய சாய் பல்லவியை, 2015ம் ஆண்டில் மலையாள திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான 'பிரேமம்' படத்திற்கு பின்னரே தென்னிந்திய சினிமா அவரை கொண்டாடத் தொடங்கியது.
'பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என பயந்தேன். ஆனால், மேக்கப் இல்லாமல் மிகவும் அழகாய் இருக்கிறார் என பாராட்டுகள் கிடைத்தது. அந்த பாரட்டுகள் தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது. அன்று முதல் மேக்கப் இல்லாமல் தான் நடிக்கிறேன்' என்றார்.
ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரங்களுக்கு 'நோ':நடிகை நடிகர்கள் படங்களை தாண்டி விளம்பரங்களில் நடித்து வருமானம் ஈட்டுவது இயல்பு தான். ஆனால், சாய் பல்லவியோ எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டோன் என தீர்மானமாக இருந்து வருகிறார். ' படங்களில் மேக்கப் இல்லாமல் நடிக்கும் போது எப்படி ஃபேர்னஸ் க்ரீம்களை விளம்பரப்படுத்த முடியும்.