சுடச் சுட சாதத்தில், ஆந்திரா மெஸ் ஸ்டைல் பருப்பு பொடியை சேர்த்து, நெய் விட்டு அப்புறம் கொஞ்சம் அப்பளத்தை நொறுக்கி பிசைந்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்..அடடே அதன் ருசியே தனி தான். நினைத்தாலே எச்சில் ஊறும் இந்த ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடியை வீட்டில் செய்து சாப்பிட்டால் என்ன? எப்படி இந்த காரசாரமான பருப்பு பொடியை செய்வது என பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு - 1 கப்
- கடலை பருப்பு - 1/2 கப்
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- பொட்டுக்கடலை - 1/2 கப்
- காய்ந்த மிளகாய் - 15 - 20
- சீரகம் - 2 டீஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
- புளி - ஒரு துண்டு
- உப்பு - தேவையான அளவு
பருப்பு பொடி செய்முறை:
- முதலில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடாக்கவும். பின்னர், அடுப்பை கம்மியான தீயில் வைத்து கடாயில் துவரம் பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை கைவிடாமல் வறுக்கவும்
- இப்போது இதை கொஞ்சம் கூட ஈரப்பதம் இல்லாத தட்டிற்கு மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில், கடலை பருப்பு, பாசிப்பருப்பு , பொட்டுக்கடலை என தனித்தனியாக வறுத்து அதே தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு, நாம் கழுவி எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை கடாயில் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வறுத்துக்கொள்ளுங்கள். கறிவேப்பிலை மொறு மொறு என வறு பட்டதும் அதே தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
- அடுத்ததாக, காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து, பின்னர் தட்டிற்கு மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, சீரகம் மற்றும் மிளகை ஒன்றாக கடாயில் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தட்டிற்கு மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
- இப்போது இந்த பொருட்கள் நன்றாக ஆறிய பின்னர், ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில், முதலில், மிளகாய் பின்னர் மற்ற பொருட்களை சேர்த்து இறுதியாக தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் ஒரு துண்டு புளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
- இப்போது இந்த கலவையை ரொம்ப நைசாகவும் இல்லாமல் கொரகொரப்பாகவும் இல்லாமல் ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு, நாம் அரைத்த பொடியை ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி தயார்..
இதையும் படிங்க: |