முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது, ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் இந்த சஷ்டிக்காக தான். ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி சப்தமி வரையிலான ஏழு நாட்கள் இந்த விரதம் இருக்க வேண்டும். இந்த ஆண்டு நாளை (நவ.2) தேதி கந்தசஷ்டி துவங்குகிறது. இந்நிலையில், விரதம் இருக்கும் முறைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்..
விரதங்கள் கடைப்பிடிக்கப்படும் முறைகள்:
பட்டினி விரதம்: காலை, மதியம், இரவு என எதாவது ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளாமல் ஒரு சிலர் விரதம் கடைப்பிடிப்பார்கள். அதே போல, ஒரு சிலர், ஒரு வேளை உணவை மட்டும் உட்கொண்டு மீதம் உள்ள இரு வேளையும் சாப்பிடாமல் இருப்பார்கள். கடுமையான விரதம் மேற்கொள்பவர்கள், மூன்று வேளை உணவையும் தவிர்த்து எளிமையான உணவை உட்கொண்டு விரதம் இருப்பார்கள். இவை தான் பட்டினி விரதம் என்றழைக்கப்படுகிறது.
பால் விரதம்: மிக முக்கியமான விரதங்களில் ஒன்று இந்த பால் விரதம். சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை மட்டுமே ஒரு டம்ளர் குடித்து விரதம் இருப்பார்கள்.
பாலும், பழமும் விரதம்:மூன்று வேளையும், முற்றிலுமாக உணவை தவிர்த்து பால் மற்றும் பழங்களை உட்கொள்வார்கள். உதாரணத்திற்கு, காலையில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு ஆப்பிள், இரவில் ஒரு மாதுளை பழத்துடன் ஒரு டம்ளர் பால் என இந்த விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.
இளநீர் விரதம்: கடினமான விரதங்களில் ஒன்று இந்த இளநீர் விரதம். ஒரு நாளைக்கு ஒரு இளநீர் மற்றும் குடித்து விரதம் இருப்பார்கள். இளநீரில் இருக்கும் வழுக்கையை எடுத்துக்கொள்ளலாம்.
மிளகு விரதம்: விரத முறைகளில் கடுமையான விரதமாக கருதப்படுவது இந்த மிளகு விரதம் தான். பால், பழம் என எந்த வகையான உணவையும் உட்கொள்ளாமல் வெறும் மிளகை மட்டும் உட்கொள்வது தான் இந்த விரதம். ஒவ்வொரு நாளும் ஒரு மிளகை அதிகரிக்க வேண்டும். முதல் நாளில் ஒரு மிளகில் தொடங்கி, இரண்டு மூன்று என 7வது நாளில் ஏழு மிளகை உட்கொண்டு விரதத்தை முடிப்பார்கள்.