வாஷிங்டன்:அமெரிக்க மத்திய அரசின் நிதி உதவிகளை நிறுத்தி வைக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு அந்நாட்டின் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வாஷிங்டன்னில் இருந்து லட்சக்கணக்கான டாலர் நிதி உதவி பெறும் அமைப்புகள், பள்ளிகள், மாகாணங்கள் இடையே குழப்பமும், அச்ச உணர்வையும் கொண்டுள்ளன. டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மேற்கொண்ட இந்த செலவு கட்டுப்பாடு குறித்த உத்தரவு என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதி உதவியை நிறுத்தும் டிரம்ப் உத்தரவு அமலுக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமெரிக்க மாவட்ட நீதிபதி லோரன் எல்.அலிகான், அதற்கு தடை விதித்தார். தன்னார்வ நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை அடுத்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் திங்கள் பிற்பகல் வரை தன்னார்வ நிறுவனங்களுக்கான உதவி தொடரும். இந்த விவகாரம் தொடர்பாக இன்னொரு நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற உள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக வெள்ளை மாளிகை தரப்பில் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வரி செலுத்துவோரின் பணத்தை கட்டுக்குள் வைப்பது குறித்த அரசியல் சட்டரீதியிலான மோதலுக்கு வழி வகுக்கும் என்று தெரிகிறது. சட்டத்துக்கு மாறாக, மனம் போன போக்கில் அதிபர் டொனால்டு டிரம்ப் செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:"அடுத்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு" - அர்ஜுனா விருது பெற்ற மனிஷா ராமதாஸ்!
டிரம்ப்பின் அண்மை கால திடீர் நிர்வாக உத்தரவுகளுக்கு இணக்கமாக செயல்படுவதற்கு கடன்கள், மானியங்களை நிறுத்தும் உத்தரவு அவசியமான ஒன்று என்று வெள்ளை மாளிகை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொனால்டு டிரம்ப் ஆட்சி, மரபு சாரா எரிசக்தி உற்பத்தியில் ஈடுபட விரும்புகிறது. மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பாதுகாப்பை நீக்குவது, பன்முகத்தன்மை, சம உரிமை, எல்லோரையும் உள்ளடக்கிய முயற்சிகள் ஆகியவற்றுக்கும் டிரம்ப் அரசு முடிவு கட்டுகிறது.
டிரம்ப் அரசின் நிதி மற்றும் நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவின் மூலம் எந்தெந்த திட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் எதிர்க்கட்சி எம்பிக்கள், அரசு அலுவலர்கள், அமெரிக்கர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி உதவிகளுக்கான தற்காலிக இடையூறுகள் பணியிழப்பு, பொது சேவைகளில் தாமம் ஆகியவை நேரிடும் என்று கருதப்படுகிறது. இதனை முழுவதுமாக எதிர்பார்க்கவில்லை, என்று கான்சாஸ் மாவட்டத்தில் உள்ள ஷாவ்னீ மிஷின் பள்ளியின் செய்தித் தொடர்பாக கூறியுள்ளார். இது போன்ற பல மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் அமெரிக்க அரசின் மானிய நிதியைப் பெறுகின்றன.
டொனால்டு டிரம்ப்பின் இந்த முடிவுக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக அவர் இவ்வாறு செயல்படுவதற்கு உரிமையில்லை என்று கூறினர். மாவட்ட நீதிபதி அலிகான் வெளியிட்ட உத்தரவுக்கு சில மணி நேரத்துக்குப் பிறகு 22 மாகாணங்களில் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் டிரம்ப் முடிவுக்கு எதிராக நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.