நியூயார்க்: காசாவின் ஹமாஸ் இயக்கத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிணைகைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் அமெரிக்க அதிபராக தாம் பதவி ஏற்கும் முன்பு அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"தயவு செய்து நேர்மறையான முடிவு நேரிடுவதற்கு அனுமதியுங்கள். அமெரிக்க அதிபராக நான் கவுரவத்துடன் பதவி ஏற்கும் தேதியான அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதிக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கில் அனைவரும் அல்லது பொறுப்பில் இருப்பவர்கள் மனித குலத்திற்கு எதிராக இந்த கொடுமைகளை செய்தவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்," என ட்ரூத் சமூக தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"இதற்கு பொறுப்பானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, யாரும் இதுவரை தாக்காத அளவுக்கு தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும். எனவே பிணைய கைதிகளை இப்போதே விடுவியுங்கள்," என்றும் கூறியுள்ளார். காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் ஈடுபடுமா என்பதை குறிக்கும் விதமாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
டிரம்ப் எச்சரிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக கருத்து சொல்லவில்லை. அதே நேரத்தில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், டிரம்ப்பின் எச்சரிக்கையை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்பை ஆசிர்வதிக்கின்றேன். நன்றி தெரிவிக்கின்றேன். நமது சகோதரர்கள், சகோதரிகள் விரைவில் வீடு திரும்ப நாம் எல்லோரும் இந்த தருணத்தில் பிராத்திப்போம்,"என்று கூறியுள்ளார்.