டெய்ர் அல்-பாலா:இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த13 மாதங்களாக நடந்து வரும் போரில், இஸ்ரேல் தாக்குதலினால் காசா பகுதியில் 44,056 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தலைமையிலான போராளிகள் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 பேரைக் கொன்றனர். மேலும் 250 பேரை பணயக் கைதிகளாக கடத்திச் சென்றனர். அவர்களில், 100 பேர் இன்னும் காசாவிற்குள் இருப்பதாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாதி பேர் கடந்த ஆண்டு போர் நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 13 மாதங்களாக நடந்து வரும் போரில், ஹமாஸ் குழுவினர் உட்பட இதுவரை 44,056 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 104,268 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் உடல்கள் இடிபாடுகளிலும், மண்ணுக்கு அடியில் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் பல இடங்களில் புதைந்துள்ள உடல்களை மீட்க மருத்துவ குழுவால் முடியாமல் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இஸ்ரேலிய ராணுவம் 17,000 க்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக ஆதாரம் இல்லாமல் தெரிவித்துள்ள காசா, கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.