ஜெருசலேம்:ட்ரோன் மூலம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் உயிரிழந்தனர். 250 பிணை கைதிகளையும் ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துச் சென்றனர். ஹமாஸுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான யாஹ்யா சின்வார் என்பவரை இஸ்ரேல் படைகள் நேற்று முன்தினம் கொன்றன. இந்த நிலையில் சிசேரியா நகரில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை நோக்கி ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. ட்ரோன் தாக்குதல் நடந்த தருணத்தில் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது மனைவி யாரும் வீட்டில் இல்லை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.