இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியான நிலையில், 33வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் நாளை (மார்ச்.3) பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பல்வேறு கலவர சம்பவங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் பல்வேறு இடங்களை கைப்பற்றிய போதும் முழு ஆதரவு கிடைக்கவில்லை.
அதேபோல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கணிசமான தொகுதிகளை கைப்பற்றின. இதையடுத்து தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கூட்டணி ஆட்சியின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து நாளை (மார்ச்.3) பிரதமர் வேட்பாளருக்கான தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தேர்தலில் வெற்றி பெறுபவர் பாகிஸ்தானின் 33வது பிரதமராக பதவியேற்றுக் கொள்வார் என்றும் பாகிஸ்தான் தேசிய சட்டப்பேரவை செயலகம் தெரிவித்து உள்ளது.
பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் ஷெபாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். அவரைத் தொடர்ந்து இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் சார்பில் ஒமர் அயூப் கான் பிரதமர் பதவிக்கான போட்டியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். வாக்கு எண்ணிக்கையில் ஷெபாஸ் ஷெரீப் வெற்றி பெற்று பாகிஸ்தானின் 33வது பிரதமராக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.
பிரதமரை தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரதமர், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வை தொடர்ந்து அதிபர் மாளிகையான ஐவான்-இ-சதரில் ( Aiwan-e-Sadr) நடைபெறும் விழாவில் புதிய பிரதமர் பதவுயேற்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை மற்ற உறுப்பினர்கள் அதே அதிபர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர். ஒருவேளை பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டால் அவருக்கு அதிபர் ஆரிப் அலி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதேநேரம் அதிபர் ஆரிப் அலி இம்ரான் கான் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் எனக் கூறப்படுகிறது
இதற்கு முன் கடந்த 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்த போது பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதவிப் பிரமாணம் செய்ய வேண்டிய நிலையில், உடல் நலன் சரியில்லை எனக் கூறி அதிபர் ஆரிப் அலி அந்த விழாவை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங்: பாப் பாடகி ரிஹானா கான்சர்ட் முதல் சினிமா பிரபலங்களின் குத்தாட்டம் வரை!