மாஸ்கோ: இந்தியாவும், ரஷ்யாவும் நீண்ட கால நட்புறவு கொண்ட நாடாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டு தோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை பலப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்தியா - ரஷ்யா இடையேயான 22வது உச்சி மாநாடு மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று, தற்போது அரசுமுறை பயணமாகப் பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளது, சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது. இதுமட்டும் அல்லாது, மோடியின் இந்த ரஷ்யா பயணத்தை பொறுத்தவரை சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மாண்டுரோவ் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன், ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாஸ்கோ விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து நோவோ-ஓகாரியோவோவில் உள்ள அதிபர் புடினின் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதிபர் இல்லத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, மோடியை பார்த்ததும் இன்முகத்துடன் புடின் வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு, அதிபர் புடின் இரவு விருந்து அளித்தார்.
இதற்கு முன்னதாக மோடியை வரவேற்றுப் பேசிய ரஷ்யா அதிபர் புடின், "மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது தற்செயலானது அல்ல இந்த வெற்றி, உங்கள் நாட்டிற்காக நீங்கள் பல ஆண்டுகளாக உழைத்தற்காக கிடைத்த பலனாக நான் நினைக்கிறேன். நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்க நபர்.
இந்தியாவின் நலன்கள் குறித்த முடிவுகளை எவ்வாறு எடுப்பது என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் முழு வாழ்க்கையையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். இதனை இந்திய மக்களும் நன்கு அறிவார்கள். உங்களை பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பாராட்டிக் கூறியதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
மேலும் புடினின் பாராட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, "நீங்கள் சொல்வது சரிதான், எனக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் உள்ளது. அது எனது மக்களும், நாடும் சார்ந்தது. தாய்நாட்டிற்கு சேவை செய்ய இந்திய மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளனர்" என்று பிரதமர் மோடி புன்னகையுடன் கூறியதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் பின்னர், நோவோ-ஓகாரியோவோவில் உள்ள புடினின் மாலிகையைச் சுற்றி அதிபர் புடினும், பிரதமர் மோடியும் உலா வந்தனர். மேலும், ரஷ்யா அதிபர் புடின், பிரதமர் மோடியை மின்சார காரில் அழைத்துக்கொண்டு அதிபர் மாளிகையை சுற்றிக்காட்டினார். அதன் தொடர்ச்சியாக, அங்கிருந்த தோட்டத்திற்குச் சென்ற இருவரும் அங்கேயே சிறிது நேரம் உரையாடியாடினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி, தனது 'X' வலைதளப்பக்கத்தில், "நோவோ-ஓகாரியோவோவில் எனக்கு விருந்தளித்த அதிபர் புடினுக்கு நன்றி. இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் நிச்சயம் இது நீண்ட தூரம் செல்லும், என்று எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஜம்மு & காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலி; ராகுல் காந்தி இரங்கல்!