தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உக்ரைனில் அமைதி திரும்ப நடவடிக்கை; நியூயார்க்கில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி! - Zelenskyy thanked PM Modi - ZELENSKYY THANKED PM MODI

பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையிலான இருதரப்பு சந்திப்பு நிகழ்ச்சி நியூயார்க்கில் நேற்று நடைபெற்றது. அப்போது, உக்ரைனில் போர் நிறுத்தம், அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு அனைவரும் விரும்புவதாக ஜெலென்ஸ்கியிடம் மோடி உறுதியளித்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரதமர் மோடியை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
அமெரிக்காவில் பிரதமர் மோடியை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Image Credits - ANI)

By ANI

Published : Sep 24, 2024, 10:47 AM IST

நியூயார்க்:உக்ரைனில் அமைதி திரும்ப பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்கு கடந்த சனிக்கிழமை 'குவாட்' கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். குவாட் கூட்டமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாகவும் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையிலான இருதரப்பு சந்திப்பு நிகழ்ச்சி நியூயார்க்கில் நேற்று நடைபெற்றது.

அப்போது, உக்ரைனில் போர் நிறுத்தம், அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு அனைவரும் விரும்புவதாக ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதியளித்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் விக்ரம் மிஸ்ரி மேலும் கூறியதாவது; அநேகமாக மூன்று மாத இடைவெளியில் இரு தலைவர்களுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு இதுவாகும். இந்தச் சந்திப்பின்போது இருநாடுகளிடையேயான விவகாரங்கள், ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதையும் படிங்க: ஹிஸ்புல்லா ஆயுத கிடங்குகள் மீது தாக்குதல்: லெபனான் மக்களை உடனே வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை!

இந்த விவகாரங்களில் இந்தியாவின் அக்கறையை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மிகவும் பாராட்டினார். மேலும், பிரதமர் மோடி உக்ரைனுக்கு வந்தது மிகவும் பாராட்டுக்குரியது என்றும், அமைதிக்காகவும், மோதலை முடிவுக்கு கொண்டுவரவும் அவர் எடுக்கும் முயற்சிகளுக்கும் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

இதேபோல், இருதரப்பு உறவில் பல விவகாரங்களில் சாதகமான அம்சங்கள் இருப்பதாக இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது நேரடியாகவோ அல்லது வருகைகள் மூலமாகவோ தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்" என அவர் கூறினார். மேலும், மூன்று நாள் சுற்றுப் பயணத்தை முடித்த மோடி, அங்கிருந்து புறப்பட்டார்.

இதேபோல், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், "எங்கள் உரையாடலின் முக்கிய கவனம் சர்வதேச தளங்களில், குறிப்பாக ஐநா மற்றும் ஜி 20-ல் உறவுகளை மேம்படுத்துவது, அமைதி வழிமுறையை செயல்படுத்துவது, இரண்டாவது அமைதி உச்சிமாநாட்டிற்கு தயாராவது ஆகியவை குறித்து விவாதித்தோம். எங்களது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்குத் தெளிவான ஆதரவு அளிப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்றார்.

ரஷ்யா - உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. சுமார் ஒரு மாதத்தில் இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு இதுவாகும். பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று உக்ரைனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் விரைவில் அமைதி திரும்புவதற்கு அனைத்து வழிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 1992ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ராஜாங்க ரீதியிலான உறவுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதிபர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி உக்ரைனுக்குச் சென்றார். இது முதல் முறையாக உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொண்ட பயணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details