சென்னை: கரோனா தொற்று மனிதர்களின் உடலில் மட்டுமல்லாது, மனதளவிலும் மிக மோசமாக பாதிப்புகளை ஏற்படுத்தியதன் மூலமாக, சில நீடித்த விளைவுகளை ஏற்படுத்தியது. உலகளாவிய மனநல அறிக்கை ஒன்றில், கரோனா தொற்றுக்குப் பிறகு மனிதர்களின் மனநலம் மற்றும் வாழ்க்கை மகிழ்ச்சியற்ற நிலையில் இருப்பதாகவும், இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை நாம் இன்னும் அடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், 35 வயதிற்குட்பட்ட இளையவர்களே கரோனா தொற்றுநோயால் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளானவர்கள் என்று உலகளாவிய மனநலத் திட்டத்தின் ஆண்டு வெளியீடான, உலகின் மனநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, உலகளாவிய மக்கள்தொகையின் மனநலத்தைப் பற்றிய பார்வையை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிக்கையானது ஆண்டு முழுவதும் உள்ள மக்களின் மனநிலை, முந்தைய ஆண்டுகளுடன் தொடர்புடைய போக்குகள் மற்றும் இந்த போக்குகளின் முக்கிய இயக்கிகள் பற்றிய நுண்ணறிவு ஆகியவற்றை வழங்குகிறது.
இதுமட்டுமல்லாது, ஆண்டு முழுவதும் வெளியிடப்படும் இந்த விரைவு அறிக்கைகள், ஒவ்வொரு ஆண்டின் தரவுகளின் அடிப்படையில், மனிதர்களின் மனநலத்தின் பல்வேறு அம்சங்கள், நுண்ணறிவுகள் மற்றும் முன்னேற்றங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 2023-ஆம் ஆண்டின் அறிக்கை, 71 நாடுகளில் இருந்து 13 மொழிகளில், 4 லட்சத்து 19 ஆயிரத்து 175 பதில்களை அடிப்படையாகக் கொண்டது.
மேலும், இந்த மதிப்பீட்டு ஆய்வு, ஒரு தனிநபரின் மனநல அளவை (MHQ-Mental Health Quotient) கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மனநிலை மற்றும் கண்ணோட்டம், சமூகத்தில் தன்னியக்கம், உந்துதல், மனம் மற்றும் உடல் இணைப்பு, அறிவாற்றல், தகவமைப்பு மற்றும் பின்னடைவு என்று ஆறு விதமாக, மன ஆரோக்கியத்தின் 47 அம்சங்களை மதிப்பிடுகிறது.