புதுடெல்லி: மலையாள நடிகர் சித்திக் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டி மலையாள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு சித்திக் நடிக்கும் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த பிறகு, மஸ்கட்டில் உள்ள ஹோட்டலில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்.
மேலும், இதுகுறித்து நடிகை திருவனந்தபுரம் போலீசாரிடம் மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்தார். இதற்கிடையே, மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து விரிவான அறிக்கையை கேரள அரசு, நீதிபதி ஹேமா கமிஷன் மூலம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, மலையாள நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். இதனையடுத்து, நடிகர் சித்திக் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 300 கோடி வசூல் செய்து இமாலய சாதனை; எந்திரன், பிகில் சாதனையை முறியடித்த ’அமரன்’!
அதனை தொடர்ந்து செப்டம்பர் 24 ஆம் தேதி முன்ஜாமீன் கோரி நடிகர் சித்திக் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அவரை காவலில் வைத்து விசாரணை செய்வது தவிர்க்க முடியாதது என தெரிவித்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து செப்டம்பர் 30 அன்று உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அந்த உத்தரவில், ''2016 இல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு புகார்தாரர் புகார் அளித்துள்ளார். மேலும் புகார்தாரர், கேரள உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியை அணுக விரும்பாமல், எங்கேயோ முகநூலில் பதிவிட்டுள்ளார். தற்போதைய மேல்முறையீட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நடிகர் சித்திக் தனது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும், வழக்கில் விசாரணை அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்