டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை (Union Budget 2025) சனிக்கிழமை இன்று காலை 11 மணிக்குத் தாக்கல் செய்ய உள்ளார். தற்போது தாக்கல் செய்யவுள்ளது நிர்மலா சீதாராமனின் எட்டாவது பட்ஜெட்டாகும். மந்தமான பொருளாதார வளர்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவு, நுகர்வு குறைவு உள்ளிட்ட பல சவால்களை இந்த பட்ஜெட் எதிர்கொள்ளவுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று (ஜன.31) துவங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் முதல் கட்டம் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரைவும், இரண்டாவது கட்டம் மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரையும் நடக்கவுள்ளது. வரும் நிதியாண்டிற்கான வருவாய் எதிர்பார்ப்புகள் மற்றும் அரசாங்க செலவினங்களை இந்த பட்ஜெட் கோடிட்டுக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் வருமான வரி அடுக்குகளில் திருத்தம் செய்யப்படலாம் எனவும், நடுத்தர வர்க்கத்தினரின் செலவினங்களை அதிகரிக்க ரூ.10 லட்சம் வரை வருமானம் வரி இல்லாததாக மாற்றலாம் எனவும், தொழில்துறையினர் மற்றும் வரி செலுத்துவோரின் மூலதன வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் AI முதலீடுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (GDP) 6.3 - 6.8 சதவீதமாகக் கணித்துள்ளது. இது 2019ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிகக்குறைவு எனக் கூறப்படுகிறது. மேலும், இது நீண்டகால பொருளாதார உந்துதலைத் தக்கவைக்கக் கட்டமைக்கப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
பட்ஜெட் திட்டங்களை வடிவமைக்கும் இந்த குழுவில், நிதியமைச்சருக்கு உதவியாக வருவாய் செயலாளர் துஹின் பாண்டே, பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அஜய் சேத், செலவு செயலாளர் மனோஜ் கோவில், டிஐபிஏஎம் செயலாளர் அருணிஷ் சாவ்லா, நிதி சேவைகள் செயலாளர் எம்.நாகராஜு மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.