அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்துக் கோயிலை திறந்து வைத்தார். இந்த கோயிலின் பெயர் சுமாமி நாராயண் திருக்கோயில் ஆகும்.
பின்னர், நிகழ்ச்சியில் நரேந்திர மோடி கூறியதாவது, "அபுதாபியில் இந்த கோயில் திறந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். அயோத்தியின் மகிழ்ச்சி இங்கு காணப்படுகிறது. அயோத்தி ராமர் கோயிலுக்கும், அபுதாபியின் இந்த கோயிலுக்கும் நான் சாட்சியாக இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது பல கால கனவு. அந்த கனவு கடந்த மாதம்தான் நிறைவேறியது. அதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தால் தானமாக வழங்கப்பட்ட 27 ஏக்கர் நிலத்தில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் இக்கோயில் அமைந்துள்ளது.
108 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் ஆன்மீகச் சின்னம் அல்ல. இதில் கலைஞர்களின் கைவண்ணம் உள்ளது. இந்தக் கோயிலுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தக் கோயிலை நிறுவியதன் மூலம், அபுதாபியில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்லாது, 140 கோடி இந்தியர்களின் இதயங்களை ஐக்கிய அமீரக அரசு வென்றுள்ளது.