இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்):பாகிஸ்தானில் சமீபகாலமாக நிலவி வரும் அரசியல் நிலையற்ற சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தான் தேசிய மற்றும் 4 மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு தினத்திற்கு முந்தைய தினத்தில், பலுசிஸ்தான் மாகாணத்தில் இருவேறு தேர்தல் அலுவலகங்களில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டனர்.
மேலும், வாக்குப்பதிவு தினத்தன்று, ஆப்கானிஸ்தான் எல்லை அருகே கைபர் பக்துன்க்வா பகுதியில் வாக்குச்சாவடியில் போலீஸ் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 போலீசார் உயிரழந்தனர். பாகிஸ்தானில் தேர்தலையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தானில் வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணும் பணி துவங்கியது. வாக்குப்பதிவு அன்று பாதுகாப்பு கருதி இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்ததால், வாக்கு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாவதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரிப்-இன் முஸ்லிம் லீக், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு இடையில் ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது.
முன்னதாக, இம்ரான் கானின் கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி இருந்ததால், அவரது ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். சுயேட்சையாக போட்டியிட்ட தனது ஆதரவாளர்கள், அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாக இம்ரான் கானின் X பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்காததால், பாகிஸ்தானில் இம்ரானின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். மேலும், யாருக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் துவங்கினர்.
சுயேட்சையாக போட்டியிட்ட இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 102 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம் லீக் கட்சி 74 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், மூன்றாவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனால் நவாஸ் ஷெரிப், பிலாவல் பூட்டோவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், அதற்கு இன்னமும் நிறைய இடங்கள் தேவைப்படுவதால், சுயேட்சையாக போட்டியிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும்ம் முட்டாஹிதா குவாமி இயக்கம் 17 இடங்களிலும், 12 இடங்களில் பிற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளதாகவும், 265 இடங்களில் 259 இடங்களுக்கான முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணப்பட்டும் இன்னமும் முடிவு அறிவிக்கப்படாததால், பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (பிப்.11) இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முடிவுகளை வெளியிடப்படாத இடங்களில் வெற்றி பெற்றவர்களையும் அறிவித்து வருகிறது.
மேலும், வாக்குச்சாவடியில் வன்முறை நடந்த இடங்களில் மறு தேர்தல் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. NA-88 (குஷாப் II), PS-18 (கோட்கி I), Pk-90 (கோஹட் I) ஆகிய இடங்களில் வாக்குச்சாவடிகளில் புகுந்து உபகரணங்கள் சூறையாடப்பட்டதால், மறுதேர்தல் நடத்தப்படும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்னும் பெருமையைப் பெற்ற சவீரா பிரகாஷ், தான் போட்டியிட்ட பிகே25 என்னும் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இது குறித்து அவரது X பக்கத்தில், “நம்ப முடியாத பயணத்திற்கு நன்றி. தலைவர் பிலாவல் பூட்டோ மற்றும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. எதிர்பார்த்ததுபோல் முடிவு இல்லாவிட்டாலும், உங்கள் ஆதரவு மிகப் பெரியது” என பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பல இடங்களுக்கும் அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத நிலையில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் லாகூர் நீதிமன்றம், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
படிவம் 45-இன் படி தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் நவாஸ் ஷெரிப் ஆகியோர் படிவம் 47-இல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, லாகூரில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்று சென்னை வருகிறார் ஜெ.பி.நட்டா.. ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்த திட்டமா?