டெல்லி : மாலத்தீவுடனான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், ராணுவ வீரர்களுக்கு பதிலாக சிவில் மக்களை பணியில் ஈடுபடுத்த இந்தியா, அந்நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில், மே 10ஆம் தேதிக்கு பின்னர் எந்த ஒரு உடையிலும் இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்து உள்ளார்.
Baa atoll தீவின் தலைநகரான Eydhafushi-யில் நடந்த கூட்டத்தில் பேசிய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மே 10ஆம் தேதிக்கு பின்னர் மாலத்தீவில் எந்தவொரு இந்திய ராணுவ துருப்பும் இருக்க மாட்டார்கள் எனக் கூறி உள்ளார். மேலும் அவர், ராணுவ சீருடையில் மட்டுமின்றி பொது உடையில் உள்ள இந்திய ராணுவ துருப்புகள் மாலத்தீவில் வசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இதை தான் நம்பிக்கையுடன் கூறுவதாகவும் முகமது முய்சு கூறி உள்ளார்.
மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை இந்திய ராணுவம் நிர்வகித்து வந்தது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் 88 பேர் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானத்தைப் பயன்படுத்தி, கடந்த சில ஆண்டுகளாக மாலத்தீவு மக்களுக்கு மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு, மாலத்தீவின் அதிபராக பொறுப்பேற்றது முதல் இந்திய எதிர்ப்பு அரசியல் கொள்கையை மேற்கொண்டு வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினரை வெளியேற்றுவதில் அதிதீவிரம் காட்டி வரும் முய்சு, மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ துருப்புக்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டார்.