கம்போங் ஸ்பியூ: கம்போடியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இந்த கோர சம்பவத்தில் கம்போடியா ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ தளத்தில் எப்படி குண்டு வெடித்தது என்று தெரியவராத நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், ராணுவ தளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் சத்தின் அருகில் இருந்த கிராமங்கள் வரை ஒலித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை சீல் வைத்த ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.