பாங்காக் : மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. வின் மிய்ன்ட், ஆங் சன் சூகி உள்ளிட்ட மக்கள் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக இன்றளவும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பல்வேறு ஊழல்கள் செய்ததாக மியான்மர் தலைவர் ஆங் சன் சூகி மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்துவ் மியாமர் ராணுவம், அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து நய்பிடாவ் சிறைச் சாலையில் ஆங் சன் சூகி அடைக்கப்பட்டார். அதேபோல் முன்னாள் அதிபர் வின் மிய்ன்ட்க்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பகோ மாகாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
தலைவர்கள் கைது மற்றும் சிறைத் தண்டனையை எதிர்த்து போராடிய பொது மக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அங்கிருந்து தப்பியோடிய மக்கள் மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.