ஸ்பெயின் (மட்ரிட்): கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஸ்பெயினில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும், இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் கடந்த திங்கட்கிழமையன்று துவங்கிய கனமழை மறுநாள் வரை கொட்டித் தீர்த்ததால், சில பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 1 மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நிவாரணப் பொருட்கள் (Credits - ANI) திடீரென பெய்த இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஸ்பெயின் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஏனென்றால், மரங்கள், கட்டடங்கள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு சேறும், சகதியுமாக உள்ளது. ஆகையால், பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதில், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ள காரணத்தால், மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வவென்சியா பகுதியில் உள்ள லட்சக்கணக்காக குடும்பத்தினர், மின்சார வசதி இல்லாமலும், மீட்புப் பணி தாமதமாவதாலும் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்களை தாக்கும் தீவிரவாதிகள்... காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை தீவிரம்!
இந்தப் பேரழிவில், தற்போது வரை 205 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வலென்சியா பகுதியில் மட்டும் 202 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இறப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, வலென்சியா நகரில் உள்ள ஒரு நீதிமன்ற வளாகம் தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி (Credits - ANI) டானா வெள்ள பாதிப்பைக் கண்காணிக்கும் குழுவில், அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமை தாங்கினார். அப்போது, அக்டோபர் 31 முதல் மூன்று நாள்கள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் "இரண்டு CH-47 Chinook ஹெலிகாப்டர்களில் DANA-வால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவுப் பொருட்கள் மற்றும் ஆடை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என வலென்சியாவிற்குச் சென்ற செல்மனார் விஜோ, தனது எக்ஸ் தளத்திலிருந்து பகிர்ந்துள்ளார்.
இது ஐரோப்பிய நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மிகவும் பொதுவான வானிலை நிகழ்வு எனவும், DANA என்ற சொல் உருவாக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு "கோட்டா ஃப்ரியா" என்ற சொல் அதிதீவிர கனமழையை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது எனவும், இது பெரும்பாலும் அதிக மழைக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்