பிளாண்டயர்:ஆப்பிரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் மலாவி நாடு அமைந்துள்ளது. இதன் துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா (வயது 51) இருந்தார். இவர் தனது மனைவி உள்பட 9 பேருடன் ராணுவ விமானத்தில் தலைநகர் லிலோங்வேயில் இருந்து, 370 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ள முசுசு என்ற பகுதிக்கு நேற்று (ஜூன்.10) புறப்பட்டு சென்றார்.
அவர் பயணித்த ராணுவ விமானம் லிலொங்வேயில் இருந்து 45 நிமிடங்களில் முசுசு விமான நிலையத்தில் அடைய வேண்டிய நிலையில், திடீரென மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்துடனான தொடர்பினை விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இழந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ரேடாருக்கு வெளியில் சென்ற விமானத்துடனான தொடர்பை பெற அணைத்து வகையிலும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் தான் சிகன்காவா மலைப்பகுதியில் விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் பயணித்த சவ்லோஸ் சிலிமா உள்ளிட்ட யாரும் உயிர் பிழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.