இலங்கை: தமிழகக் கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை கடற்படை தொடர்ச்சியாகக் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அது மட்டுமல்லாது படகோட்டிகளுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க இலங்கை - இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (பிப்.23) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதில் நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ்ப்பாணம் பங்குத்தந்தை, இலங்கை அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து சிலுவைப் பாதையும், தேர் பவனியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் 2வது நாளான நாளை (பிப்.24) காலை கூட்டுத் திருப்பலி நடைபெற உள்ளது. பின்னர் கொடி இறக்கத்துடன் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா முடிவடைகிறது.