வாஷிங்டன்:அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் காணுகிறார். துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி உஷா சிலிகுரியின் கணவர் ஜேடி வென்சை, அறிவிக்கப்பட்டுள்ளார்.
மறுபுறம் ஜனநாயக கட்சியில் அடுத்த அதிபர் வேட்பாளர் யார் என்கிற கேள்வி தொடர்ந்து நீடித்து வந்தது. மீண்டும் அதிபர் ரேசில் ஈடுபடப் போவதாக அதிபர் ஜோ பைடன் கூறி வந்தார். அதேநேரம் அண்மைக் காலமாக அவரது செயல்பாடுகள் மீது ஜனநாயக கட்சியினரே அதிருப்தியில் இருந்தனர்.
உதாரணமாக பொது வெளியில் அவரது உரைகள், அண்மையில் டிரம்புடனான விவாதத்தில் பைடன் தடுமாறியதை மேற்கொள் காட்டி ஜனநாயக கட்சியினர் அதிபர் வேட்பாளர் தேர்வில் இருந்து அவர் விலக வேண்டும் என கோரி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன் அதிபர் அமெரிக்கா வந்த போது நாடாளுமன்றத்தில் அவரை ரஷ்ய அதிபர் புதின் எனக் கூறி பைடன் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபர் டிரம்ப் என பைடன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என தொடர் விமர்சனஙகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனிடையே முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என கோரி இருந்தார்.
இதையடுத்து சில நாட்களாக பைடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அந்த பதவிக்கு கமலா ஹாரீஸ்க்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பைடன் தனது எக்ஸ் பக்கத்தில், எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் அதிபராக தனது கடமைகளில் முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், 2020ஆம் ஆண்டு துணை அதிபர் வேட்பாளார் தேர்வுல் தனது முதல் முடிவு கமலா ஹாரீஸ் தான் என்றும் அது தான் எடுத்த சிறந்த முடிவு. இந்த ஆண்டும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸ் தொடர தனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்க விரும்புகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் ஜனநாயக கட்சியின் தொண்டர்கள் ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது, அதை அனைவரும் செய்வோம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நடுரோட்டில் இந்திய வம்சாவளி நபர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! - Indian Origin Man Shot Dead In US