இஸ்லாமாபாத் : இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டு பயணங்கள், உலக நாடுகளின் தலைவர்கள் உடனான சந்திப்பு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உடனான சந்திப்பின் போது வழங்கப்பட்ட விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், தனிப்பட்ட முறையில் முறைகேடாக விற்றதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு தெரிவித்தது.
அரசு கருவூலத்திற்கு வரும் பரிசுப் பொருட்களை பேணிக் காக்கும் பணியை தோஷகானா துறை மேற்கொண்டு வந்த நிலையில், இது தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பீவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பீவி ஆகியோருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சிறைத் தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கான் மற்றும் புஷாரா பீவி ஆகியோரின் சிறைத் தண்டனை நிறுத்தி வைத்தது. அரசு ரகசியங்களை கசியவிட்டதாக பதியப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில், அவருக்கு சிறிய நிவாரணமாக தோஷகானா வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :சமோசா முதல் சிக்கன் பிரியாணி வரை.. வேட்பாளர் எவ்வளவு செலவு செய்யலாம்? - தேர்தல் ஆணையத்தின் விலை பட்டியல் கூறுவது என்ன? - Election Expenditure List